(UTV | அமெரிக்கா) – ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ள நிலையில் அவர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2001 ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா அமைப்பு நடத்திய தாக்குதளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அல்கொய்தா அமைப்புக்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இறங்கிய அமெரிக்க ராணுவம் அங்கு தலீபான்களை ஒடுக்கி ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்டது. மேலும் 2011ம் ஆண்டு பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்க படைகள் மெல்ல திரும்ப பெறப்பட்டன.
அதை தொடர்ந்து தலிபான்கள் அமைப்பு அடிக்கடி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் தொடர்ந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு 2018ம் ஆண்டு அமெரிக்கா தலீபான்களுடன் ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தது.
அதன்படி தலீபான்கள் அமெரிக்கா மற்றும் தோழமை நாடுகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதியளிக்கும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்ப பெறப்படும். இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அமெரிக்க படைகளை முழுவதுமாக திரும்ப பெற நடப்பு அதிபர் ஜோ பிடன் முடிவெடுத்துள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெள்ளை மாளிகை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.