(UTV | புதுடெல்லி) – கொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9ம் திகதி முதல் மே 30ம் திகதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பையில் ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அங்கு போட்டியை நடத்த முடியாதபட்சத்தில் ஐதராபாத் அல்லது இந்தூரில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஐதராபாத்தில் போட்டியை நடத்த தயாராக இருப்பதாக முன்னாள் கேப்டன் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் இதுவரை 3 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியைச் சேர்ந்த நிதிஷ்ராணா, டெல்லி வீரர் அக்ஷர்படேல், பெங்களூர் அணியின் படிக்கல் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதில் ராணா உடல்நலம் தேறியதால் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
பாதுகாப்பு வளையத்துக்குள் வீரர்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் வீரர்கள் யாருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்துவிட் டது. இதனால் வீரர்கள் தொற்றில் இருந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்க ஐ.பி.எல். வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி என்று கிரிக்கெட் வாரியம் துணைத்தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்துள்ளார்.