(UTV | கொழும்பு) – தான் சேவையாற்றிய பிரதேசத்தின், அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதி ஒருவரின் தலையீடு காரணமாக பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றபட்டதாக கூறப்படும், வென்னப்புவ, தங்கொடட்டுவ பிரதேசத்துக்கு பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேரா, தற்போது நீர்கொழும்புக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவித்தலை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்து, குறித்த அரசியல்வாதி உதவி பொலிஸ் அத்தியட்சர் தொடர்பில் முன்வைத்த தலையீடுகளை தொடர்ந்து, அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டு இருந்தார்.
பிரதேசத்தின் 28 சட்ட விரோத கடத்தல் காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் தேவைக்காக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனைவிட உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேரா, உருவாக்கிய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான தனக்கு கீழான சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவும் கலைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேர்மையாக போதைப் பொருள், கள்ளச் சாரயத்துக்கு எதிராக செயற்பட்ட அதிகாரி ஒருவரை இடமாற்றியமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. நேற்றைய தினமும் பிரதேச மக்கள், மத ஸ்தலங்களை மையபப்டுத்தி, எரிக் பெரேராவின் இடமாற்றத்தை கண்டித்து நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த பின்னணியில் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தீவிர கவனம் செலுத்தி, உதவி பொலிஸ் அத்தியட்சர் எரிக் பெரேராவை நீர்கொழும்புக்கு பொறுப்பான் உதவி பொலிஸ் அத்தியட்சராக நியமித்துள்ளதாக அறிய முடிகின்றது. இதற்கான அனுமதி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடமாற்றம் தொடர்பில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் தலையீடு உறுதியாகியுள்ளதாக சமூக வலைதளங்களில், அது குறித்த கடிதம் ஒன்று வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.