உலகம்

சிக்கியது கொள்கலன் கப்பல் : ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் நட்டம்

(UTV | எகிப்து) – உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள்.

இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும்.

மத்தியத் தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி. இதற்கு மாற்று என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாக சுற்றிக்கொண்டு செல்வதே ஆகும். இது மிகவும் நீளமான சுற்றுவழி.

ஒவ்வொரு நாளும் இந்த கால்வாய் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 510 கோடி அமெரிக்க டாலர் என்றும், கிழக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 450 கோடி அமெரிக்க டாலர் என்றும் கப்பல் போக்குவரத்து வல்லுநர் லாயிடு தருகிற தரவுகள் தெரிவிக்கின்றன.

கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், இந்த வேலை முடிய வாரக்கணக்கில் ஆகும் என்று தெரிகிறது.

“திடீரென வீசிய பலத்த காற்றால் பாதை மாறிப்போன இந்தக் கப்பல் துரதிர்ஷ்டவசமாகத் தரை தட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக” எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கூறுகிறது.

‘எவர் கிவன்’ என்ற இந்தக் கப்பலை தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் மெரைன் என்ற நிறுவனம் இயக்கிவருகிறது.

இதன் நான்கு கால்பந்து திடல் அளவு நீளம் கொண்ட இந்த கப்பல் உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று. 2 லட்சம் டன் எடை கொண்ட இந்த கப்பல் 20 ஆயிரம் கண்டெயினர்களை கொண்டு செல்லவல்லது.

இந்த கப்பல் குறுக்காகத் திரும்பி தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாகச் செல்லவேண்டிய பிற கப்பல்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலக வணிகத்தின் அளவு அதிகரித்துவிட்டதால், கடந்த பத்தாண்டில் கண்டெயினர் கப்பல்களின் அளவு கிட்டத்தட்ட இருமடங்காகப் பெருத்துவிட்டது. இதனால், அவை சிக்கிக்கொண்டால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது.

உலக வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழியாகவே நடக்கிறது.

பெட்ரோலியம் தரவி, துணி, அறைகலன்கள், கார்கள், ஆலைத் தயாரிப்புகள் போன்ற நுகர்பொருள்கள் இந்த கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

லாயிடு தரும் தரவுகளின்படி கால்வாயின் இரு புறமும் 160 கப்பல்கள் தற்பது காத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 41 பெரிய சரக்குக் கப்பல்கள், 24 கச்சா எண்ணெய் கப்பல்கள்.

ஒவ்வொரு நாள் தாதமத்தையும் சரி செய்ய இரண்டு நாள்கள் தேவைப்படும் என்கிறார் ஓ.எல். யுஎஸ்ஏ என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆலன் பேயர்.

தரைதட்டியிருக்கும் கப்பலில் பல்லாயிரக்கணக்கான நுகர்பொருள் கண்டெயினர்களோடு ஏற்றுமதிக்குத் தேவையான காலி கண்டெய்னர்களும் உள்ளன.

அவசர காலத் திட்டம்

தரைதட்டிய கப்பலால் ஏற்படும் தாமதம் சில நாள்களாக இருந்தால், பெரும்பாலான நிறுவனங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மீட்புப் பணி சில வாரங்கள் வரையில்கூட ஆகலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இதனால், ஏற்கெனவே கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக விநியோக வலைப்பின்னல் இன்னுமொரு பேரிடியை சந்திக்கிறது.

மீட்புப் பணிக்கு எத்தனை நாள்கள் ஆகும் என்று சொல்ல முடியாத நிலை நீடிக்குமானால், கப்பல்கள் ஆப்பிரிக்காவிந் நன்னம்பிக்கை முனையை சுற்றிக்கொண்டு போகவேண்டும். இதற்கு 7 முதல் 9 நாள்கள் கூடுதலாகத் தேவைப்படும் என்று தெரிவிக்கிறார் பேயர்.

சில நிறுவனங்கள் அதிக விலையுள்ள சரக்குகளை விமானத்திலோ, ரயிலிலோ அனுப்ப நினைக்கலாம்.

ஆனால், சரக்குகள் ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்டுவிட்டால், கப்பல் போக்குவரத்து நிறுவனமோ, கொள்முதல் செய்தவர்களோ, இந்த சரக்குகள் வந்து சேரும் நேரத்தை மாற்றியமைக்க எதுவும் செய்ய முடியாது என்கிறார் அவர்.

மேயர்ஸ்க், ஹபக்-லாயிடு என்ற இரண்டு பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியை தவிர்ப்பது குறித்து ஆலோசித்துவருவதாக கூறியுள்ளன.

பிரும்மாண்ட மண்வாரி இயந்திரங்கள், தூர்வாரி இயந்திரங்கள், இழுவைப் படகுகள் ஆகியவற்றின் துணையோடு தரைதட்டிய கப்பலை மீட்க தம்மாலான அனைத்தையும் செய்துவருவதாக எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறுகிறது.

Related posts

ஜனாதிபதியுடன் பயணிக்க முடியாது : பிரதமர் இராஜினாமா

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

சுலைமானி கொலைக்கு பழிவாங்குவோம் : டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்