(UTV | அவுஸ்திரேலியா) – பாலுறவு சம்மதத்தை பதிவு செய்ய ஒரு செயலியை பயன்படுத்தலாம் என நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) காவல் ஆணையரின் யோசனையை அவுஸ்திரேலியர்கள் பரவலாக கண்டித்துள்ளனர்.
உடலுறவு கொள்வதற்கான பரஸ்பர சம்மதத்தை மக்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யக்கூடிய ஒரு செயலி பற்றிய யோசனையை மிக் புல்லர், கடந்த வியாழக் கிழமை தெரிவித்தார்.
“தெளிவான சம்மதத்தை” உறுதி செய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
இது ஒரு குறுகிய பார்வை கொண்ட, தவறாக பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு கொண்ட யோசனை என்று பலரும் விமர்சித்துள்ள நிலையில் இரகசிய கண்காணிப்பை மேற்கொள்ள அரசு இதை பயன்படுத்துமா என்ற கவலையும் எழுப்பப்பட்டுள்ளது.
சமீபத்திய வாரங்களில் ஆஸ்திரேலியர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் துன்புறுத்தப்படுவது குறித்து ஒரு தேசிய விவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்களன்று நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்ட செயலி தொடர்பான யோசனை, ‘வெளிப்படையான ஒப்புதல் கோரும் செயலை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என என்.எஸ்.டபிள்யூ பொலிஸ் தெரிவித்துள்ளது.
“உங்களுக்கு ஒரு மகன் அல்லது ஒரு சகோதரர் இருக்கலாம், இது மிகவும் சவாலானது என்று நீங்கள் கருதலாம். ஆனால் இந்த செயலி … அனைவரையும் பாதுகாக்கும்,” என்று கமிஷனர் மிக் புல்லர் , நைன் நெட்வொர்க்கிடம் தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை நீதிமன்ற வழக்குகளில், வெளிப்படையான சம்மதத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம், எப்போதுமே இருக்கும் ஒரு பிரச்சினை என்றும், செயலியில் பதிவு செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெற அது உதவும் என்றும் அவர் கூறினார். இந்த யோசனை என்.எஸ்.டபிள்யூ அரசிடம் எழுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.