உள்நாடு

கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி திட்டம்

(UTV | கொழும்பு) – கொள்ளுபிட்டி சந்தை வளாக அபிவிருத்தி தொடர்பான உத்தேச திட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

தற்போது கொள்ளுபிட்டிய சந்தை அமைந்துள்ள இடத்தில் 39 மாடியிலான புதிய சந்தையுடன் கூடிய குடியிருப்பு கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகள் முழுமையாக சந்தை தொகுதிக்காக ஒதுக்கப்படும். எட்டாவது மாடியில் இருந்து மேல்நோக்கி இரண்டு கோபுரங்களில் கட்டப்படும் 30 மாடிகள் சொகுசு குடியிருப்பு கட்டிடங்களை கொண்டதாக அமையும்.

புதிய அபிவிருத்தி திட்டத்தின் மூலம் சில மாம்பழங்கள், பழங்கள் அல்லது காய்கறிகளை விற்க விரும்பும் எவருக்கும் இடம் உண்டா என்று கௌரவ பிரதமர் வினவினார். பழங்கள் மற்றும் காய்கறிகளின் விற்பனைக்கு இங்கு ஒரு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.

அதற்கமைய, சாதாரண வர்த்தகர்கள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு புதிய சந்தை வளாகத்தில் நிச்சயமாக இடம் ஒதுக்குமாறு கௌரவ பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

இப்புதிய சந்தை வளாகத்தை சுற்றுலா தலமாகவும், உள்ளூர் உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

தற்போது 30-40 வாகனங்கள் மாத்திரமே இங்கு நிறுத்தக்கூடியதாக உள்ள போதிலும், இந்த உத்தேச திட்டத்தின் ஊடாக 348 வாகனங்களை நிறுத்தக்கூடிய வகையிலான வாகன நிறுத்தமொன்று நிர்மாணிக்கப்படும்.

கொள்ளுபிட்டிய சந்தை வளாக அபிவிருத்தி திட்டம் குறித்து டிசைன் ஒன் முகாமைத்துவ பணிப்பாளர் சிரேஷ்ட கட்டிடக் கலைஞர் தனஞ்சன அமரசேகர விளக்கினார்.

கொழும்பு மாநகர சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து, உத்தேச திட்டம் ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மூன்று ஆண்டுகளில் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படும் புதிய திட்டத்திற்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அடிக்கல் நாட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை, மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகியன இணைந்ததாக இப்புதிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித ராஜபக்ஷ, கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் என்.பீ.கே.ரணவீர, டிசைன் வன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தனஞ்சன அமரசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related posts

வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்