(UTV | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என பாராளுமன்ற உறுப்பினர் சான் பிரதீப் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில்;
“… பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்ற யோசனை மக்கள் மத்தியில் இருந்தே ஆரம்பத்தில் இருந்து எழுந்தது.
மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்றார். ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து பாரிய சவால்கள் தோற்றம் பெற்றன.
இதுவரை காலமும் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகளை காட்டிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாறுப்பட்ட அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அரச நிதியை சேமிக்கம் கொள்கை அரச தலைவர்களிடமிருந்து தோற்றம் பெற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தனக்கான பல அரச செலவினங்களை குறைத்துக் கொண்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கை 10ஆம் நிலையை அடைவதற்கு ஜனாதிபதியில் சிறந்த திட்டங்கள் பிரதான காரணியாக அமைந்தன.
இரண்டாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.ஆனால் அரசியல் மட்டத்தில் அவ்வாறு பேசப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஒருவேளை ஜனாதிபதி மீண்டும் போட்டியிட மறுப்பு தெரிவித்தால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ களமிறங்குவார்.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் ஒருசிலர் அவருக்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
சேறுப்பூசுவதால் பொதுஜன பெரமுனவின் எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே தனித்து ஆட்சியமைக்கும்..” எனத் தெரிவித்திருந்தார்.