(UTV | கொழும்பு) – ஜெனீவா பிரச்சினையினை இலக்காகக் கொண்டு இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்கில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துகிறோம் என்ற எண்ணப்பாட்டை வெளிப்படுத்த மாகாண சபை தேர்தல் தொடர்பாக பேசினார்கள், உண்மையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்தும் எண்ணப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.
இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
அரசியலமைப்புச் செயற்பாடுகள் ஒன்றில் பாராளுமன்ற தெரிவுக்குழு மூலம் அல்லது முழு பாராளுமன்றத்தையும் தெரிவுக் குழுவாக மாற்றி வரைவு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இந்த இரண்டு வழிமுறைகளின் பிரகாரமே முன்னைய வரைவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்த்திற்கு வெளியே அவர்களுடைய நெருங்கிய நபர்களை சட்டத்தரணிகளைக் கொண்டு வரைவு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.இது ஏற்றுக் கொள்ள முடியுமான சம்பிரதாயமல்ல.தங்கள் வீட்டுக்குச் செல்லும் வழியில் அரசியலைமைப்பு வரைவை முன்னெடுப்பது பெறுத்தமற்றது. வெளிப்படைத்தன்மையாக செயற்படுங்கள். எங்களுடைய பங்களிப்பை நாங்கள் வழங்குவோம்.
நல்லாட்சியில் 45 அங்கத்தவர்களைக் கொண்டு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் 3/2 பெரும்பான்மையுடன் நாங்கள் அரசியலைப்பு திருத்தங்களை முன்னெடுத்தோம். இதற்கு வெளிப்பபடைத்தன்மை தான் காரணம்.
ஜெனிவா விவகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ தான் ஆரம்பித்தார். பிரிதொரு வார்த்தையில் சொல்வதென்றால் ஜெனிவாவை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவர் மஹிந்த தான்.1994 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுப் பிரச்சினைகளை ஜெனிவாவிற்கு கொண்டு சென்றது மஹிந்த தான். யுத்த வெற்றிக்கு பின்னர் மனித உரிமை மீறப்பட்டதான குற்றச்சாட்டு ஒப்பந்தத்தில் பான் கீ மூனுடன் கையெழுத்திட்டது மஹிந்த தான். இன்று இந்தப் பிரச்சினைகளால் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறார்கள். ஒதுங்கி செயற்படுகின்றனர். இவ்வாறு செயற்பட முடியாது. சர்வதேச பங்கேற்பு அவசியம். இராஜதந்திர பங்கேற்பு (Dilpomatic Engagement)எங்களுக்கு அவசியம்.எதை செய்ய முடியும் எதை செய்ய முடியாது என்பதை தெரியப்படுத்தி வெளிப்படையாக செயற்படுவது தான் இராஜதந்திரம் என்று தெரிவித்தார்.