(UTV | கொழும்பு) – க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரை, சாதாரண தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை ஒழுங்கு செய்தல், அவற்றை நடாத்துதல் ஆகியவற்றுக்கு இன்று(23) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அனுமான வினாக்கள் அடங்கிய பரீட்சைத்தாள்கள், அவ்வாறான பரீட்சைத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், வழங்குவதாக அறிவிப்பு செய்தல், துண்டுப் பிரசுரம், பதாகைகள் போன்றவற்றை நேரடியாக அல்லது இணையத்தளங்களின் ஊடாக வெளியிடுதல், அவ்வாறானவற்றை வைத்திருத்தல் என்பன தடை செய்யப்படுவதாக, குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொது பரீட்சைகள் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உத்தரவிற்கு அமைய, ஜூன் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட 1816 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவோர் அல்லது நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்த்தரவுகளை மீறுபவர்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1911 எனும் துரித இலக்கத்திற்கு அழைத்து முறையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக 2020 டிசம்பரில் இடம்பெற வேண்டிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் மார்ச் 01 முதல் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.