(UTV | அம்பாறை) – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமானது.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிகள் சுவீகரிக்கப்படுதல், முஸ்லிம்களின் ஜனாசாக்கள் கட்டாயத் தகனம் செய்யப்படுதல் மற்றும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில், திருகோணமலை சிவன் கோவிலடியில் இன்றைய மூன்றாம் நாள் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலையில் இருந்து முல்லைத்தீவு நோக்கி, அகிம்சை வழி போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.