(UTV | மலையகம்) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று மலையகம் தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் மலையகத்தில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களும் ஏனைய துறையினரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று(05) காலை முதல் மலையகப் பகுதிகளில் அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கியுள்ளன. பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. பஸ் போக்குவரத்தும் மலையக நகரங்களில் முடங்கியுள்ளது.
அனைத்து தோட்டப்பகுதிகளிலும் பணிகள் முற்றாக நிறுத்தப்பப்பட்டுள்ளதுடன், எந்தவொரு தொழிற்சாலையும் இயங்கவில்லை.
எதிர்வரும் 8ஆம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் சேர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.