(UTV | இந்தியா) – இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவு குறித்த தனது சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தாய்லாந்தில் இரு சர்வதேச பாட்மிண்டன் போட்டிகள் நடைபெறுகின்றன. யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 12 முதல் 17 வரையும், டோயோடா தாய்லாந்து ஓபன் போட்டி ஜனவரி 19 முதல் 24 வரையும் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்றுள்ளார் இந்தியாவின் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால்.
கொரோனா சூழல் காரணமாக பல்வேறு போட்டிகள் பாதிக்கப்பட்டதால் ஓய்விலிருந்த சிந்து, சாய்னா உள்ளிட்ட முக்கிய வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும்.
இந்நிலையில் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சாய்னாவின் கணவரும் பாட்மிண்டன் வீரருமான காஷ்யப் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டது குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள சாய்னா நெவால், டுவிட்டரில் அது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
அதில், நேற்று எடுத்த கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. இதனால் குழப்பமாக உள்ளது.
இன்று ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாங்காக்கில் உள்ள மருத்துவமனைப் போகச் சொன்னார்கள். விதிமுறையின்படி, பரிசோதனை மேற்கொண்ட ஐந்து மணி நேரத்துக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே உலக பாட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாய்லாந்து போட்டியில் பங்கேற்க வந்த இரு இந்திய வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் மறுபரிசோதனையில் ஒரு இந்திய வீரருக்கு கொரோனா இல்லை, அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள வீரருடன் அறையில் ஒன்றாக தங்கியுள்ள மற்றொரு வீரர் இதன் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே இன்று அவர் பங்கேற்கவிருந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய ஆட்டத்திலிருந்து விலகியுள்ள வீரர்களின் பட்டியலில் சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்மூலம் கொரோனாவால் சாய்னா நெவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්