(UTV | கொழும்பு) – 2021ம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை இன்று முதல் ஆரம்பிக்க சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அனைத்து திணைக்களங்களும் முழுமையாக செயற்படுவதுடன், கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்களின் கீழ் ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற பணியாளர்களில் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இந்தப் பரிசோதனைகளில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுநோய் உறுதி செய்யப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய ஜனவரி 08 ஆம் திகதி வரை சபை அமர்வுகள் இடம்பெறும்.
இன்றைய தினம் கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படுவதுடன், ஜனவரி 06 ஆம் திகதி தண்டனை சட்டக்கோவையின் திருத்த சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஜனவரி 07 ஆம் திகதி புலமைச் சொத்து திருத்த சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.