உள்நாடு

ஆழிப்பேரலைக்கு 16 ஆண்டுகள் பூர்த்தி

(UTV | கொழும்பு) –  2004 டிசம்பர் 26 ஆம் திகதி உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக பதிவாகிய இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை சூரையாடிச் சென்றது.

ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்களை இந்த ஆழிப்பேரலை காவுகொண்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கியது.

குறித்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30,196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டதுடன், 21,411 பேர் காயமடைந்தனர். மேலும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

அதுமட்டுமன்றி சொத்துகள், உடைமைகள் சேதமடைந்தமையினால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்படைந்தன.

சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 16 ஆண்டுகள் உருண்டோடியுள்ளபோதும், அது ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் எம் நெஞ்சைவிட்டு நீங்காமலேயே உள்ளன.

இன்றை தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில், ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் நினைவுகளில் UTV செய்திச் சேவையும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூறும் பொருட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதற்கமைய, இன்று முற்பகல் 9.25 தொடக்கம் 9.27 வரையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட மட்டத்தில் சர்வ மத வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குருநாகல் – மீரிகம பகுதிக்கு பிரதமர் திடீர் கண்காணிப்பு விஜயம்

MV XPress pearl : 20 பேரிடம் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கைது