உள்நாடு

வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டம் 14ஆம் திகதி முதல்

(UTV | கொழும்பு) – கிராமிய மற்றும் அரை நகர்ப்புற வாசிகளின் உண்மையான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் அடையாளங்காணப்பட்ட ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற நிதி அமைச்சின் ஆலோசனை செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

கிராமிய மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் காணப்படும் உண்மையான தேவைகளை கண்டறிந்து குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அரசியல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதற்கு நிதி அமைச்சின் ஆதரவை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் இதன்போது பரிந்துரைக்கப்பட்டது.

அது தொடர்பில் நிதி அமைச்சு மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கையர்களில் 72 வீதமான கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற மக்களின் வாழ்க்கை மட்டத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதிகாரத்துவத்திற்கு அன்றி மக்களின் அத்தியவசிய முன்னுரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என இதன்போது பரிந்துரைக்கப்பட்டதுடன், அதற்கமைய இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் முன்னுரிமை பட்டியலொன்றை தயார்ப்படுத்துவதற்கு நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள் உடன்பாடு தெரிவித்தார்.

ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகள் தொடர்பிலும் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளுக்கு தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்குவது தொடர்பிலும் நிதி அமைச்சர் மற்றும் கமத்தொழில் அமைச்சர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்து அப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார அவர்கள் முன்வைத்த ஓய்வூதிய கொடுப்பனவு முரண்பாடுகள் தொடர்பிலான பிரச்சினைக்கு விரிவான பதிலை முன்வைத்த நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல அவர்கள், சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு ஆகியவற்றுக்கு மாத்திரம் அரசாங்கம் 1.1 டிரில்லியன் ரூபாயை செலவிடுவதாக சுட்டிக்காட்டினார்.

வரவு செலவுத் திட்டத்திற்கமைய 50 ஆயிரம் பட்டதாரிகள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து 35 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டும் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளும் இதில் இணைத்து கொள்ளப்படவுள்ளதால் அவர்களது சம்பளமும் இதில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இது எந்தவொரு அரசாங்கமும் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நிதி முகாமைத்துவம் செய்யும் சந்தர்ப்பம் என தெரிவித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இதற்காக மிகவும் சிறப்பாக செயல்படும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, சமுர்த்தி, வதிவிட பொருளாதாரம், நுண் நிதியம், சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, குணபால ரத்னசேன, பிரமித பண்டார தென்னகோன், டப்ளிவ்.டீ.வீரசிங்க, மொஹமட் முஸம்மில், நிதி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அண்ணனும் தம்பிக்கும் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

கொழும்பு சிறார்களுக்கு புதிய வகை காய்ச்சல்

மருந்துக்கே தட்டுப்பாடு