(UTV | கொழும்பு) – இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார்.
இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டு, பயிற்சி உதவிப் பொலிஸ் அத்தியட்கராக பணியில் இணைந்து கொண்ட சி.டி விக்ரமரத்ன, சுமார் 36 வருடகாலமாக பொலிஸ் சேவையில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன், அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் B.SC பட்டப்படிப்பையும், கொத்தலாவவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் M.SC பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார்.
மேலும், பிரித்தானியாவின் Bedfordshire மற்றும் அமெரிக்காவின் Howard பல்கலைக்கழகத்திலும், சி.டி விக்ரமரத்ன பட்டங்களைப் பெற்றுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளின் அடிப்படையில், இதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி முதல், இதுவரையான காலப்பகுதி வரை சி.டி விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியிருந்தார்.
இந்த நிலையில், பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, சி.டி விக்ரமரத்னவின் பெயர் ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு, அண்மையில் பாராளுமன்ற பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஜனாதிபதியின் பரிந்துரைக்கு, பாராளுமன்றப் பேரவை அனுமதி வழங்கியது.