(UTV | கொழும்பு) – சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(19) ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதற் சுற்றில் 34818 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நியமனம் பெறுவோருக்கு அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனம்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 06 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
தேசிய பயிலுனர் மற்றும் தொழிற் பயிற்சி அதிகார சபை பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ளது.
பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்யும் பயிலுனர்களுக்கு NVQ III தரச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தின் போது பயிலுனர்களுக்கு 22,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படும்.
ஆறு மாத பயிற்சியின் பின்னர் பயிலுனர்கள் PL-01 வகுப்பில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு, அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசின் கீழ் உள்ள நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படுவர்.