(UTV | சுவிட்சர்லாந்து) – விளம்பர நிறுவனங்கள் ஒன்றுக்கு ஒன்று போட்டியிட்டு தங்களது விளம்பரங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்ற நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் நிறுவனமொன்று, தனது நிறுவன விளம்பரத்திற்கு வித்தியாசமான அனுகுமுறையொன்றை கையாண்டு வருகிறது.
அதாவது, இலவச வைஃபை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உங்கள் குழந்தைக்கு எங்கள் நிறுவனத்தின் பெயரை வைத்தால் போதும் என குறித்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ட்விஃபி (Twifi) என்ற நிறுவனம் தங்கள் நிறுவன பெயரை மக்களிடம் கொண்டு செல்லவே இந்த வித்தியாசமான முறையை கையாண்டுள்ளது.
குறித்த நிறுவனம் சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. அதில், உங்கள் குழந்தைகளுக்கு எங்கள் நிறவனப் பெயரை வைத்தால் 18 ஆண்டு வரை வைபை இலவசம் என அறிவித்தது.
மேலும், உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவேற்றவும். உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு ட்விஃபி (Twifi) நிறுவனம் உங்களுக்கு 18 வருட இலவச வைபை சேவையை வழங்கும் என்றது. இந்த விளம்பரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த சுவிட்சர்லாந்து தம்பதி ஒருவர் தங்களது பெண் குழந்தைக்கு ட்விஃபியா (Twifi) என பெயரிட்டனர். இதன்மூலம் அந்த பெண் குழந்தைக்கு 18 ஆண்டு வரை வைபை இலவசமாக கிடைக்க உள்ளது என அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதேபோல், மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அந்த நிறுவனத்தின் பெயர் இருக்கும்படி பெயர்கள் வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், வைஃபைக்காக செலவழிக்கும் பணம் தங்கள் குழந்தைகளின் சேமிப்புக் கணக்கில் உள்ளதாகவும். இது பெரியதோர் சேமிப்பெனவும் தெரிவித்துள்ளனர் என்றால் பாருங்களே..