(UTV | ரஷ்யா) – ரஷ்ய ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து தென்கிழக்கில் ரியாசான் என்ற இடத்துக்கு அருகே இராணுவ தளத்தில் ஆயுதக்கிடங்கு செயல்பட்டு வந்தது. இங்கு ஏவுகணைகளும், பிற பீரங்கி ஆயுதங்களும் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அந்த ஆயுதக்கிடங்கில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதியில் அவசர காலநிலை அமுல்படுத்தப்பட்டது.
அந்த ஆயுதக்கிடங்கில் இருந்து 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் உடனடியாக, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.