(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து, தனது தந்தை அறிந்திருந்ததாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ நேற்றைய தினம் (16) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவில் பேராயர் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையினை கிளறியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து, அனுப்பப்பட்ட முன் எச்சரிக்கை பற்றி கத்தோலிக்க திருச்சபை அறிந்திருக்க வாய்ப்புள்ளது என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஹரீன் பெர்னாண்டோ சாட்சியம் அளித்திருந்தார்.
சட்டமா அதிபரின் பிரதிநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பாரம்பரியமாக பேராயர் ஒரு முக்கிய உயிர்த்த ஞாயிறு ஆராதனையை நடத்துகிறார்.எனினும் ஏப்ரல் 21, 2019 அன்று அவர் அத்தகைய ஆராதனையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் 2019 ஏப்ரல் 20ஆம் திகதியன்று ஆராதனை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.
தாக்குதல்கள் தொடர்பான ஏனைய விஷயங்களை விசாரிக்கும் போது இந்த விடயம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும் என்று ஹரின் பெர்ணான்டோ ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது ஹரீன் பெர்னாண்டோ இனது தந்தை தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தமை தொடர்பில் வாதங்கள் எழுப்பப்பட்டன, இதன்போது கருத்துத் தெரிவித்த அரச சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்திற்கு முன்னைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் நந்தலால் என்பவருடன் ஹரீன் பெர்னாண்டோ இனது தந்தை தொலைபேசியில் பேசியிருந்ததாக ஆதாரம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வனாத்தவில்லு வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் சஹ்ரான் ஹஷீம் குழுவின் உறுப்பினரான ஆமி மொஹிதீன் என்பவரை தேடி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பாசிக்குடா சென்றிருந்த போது அங்கு நந்தலால் தொடர்புபட்டிருந்த நிலையில், ஆமி மொஹிதீன் கைதான பின்னர் அவரது கைபேசியில் நந்தலாலின் புகைப்படம் இருந்ததாகவும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
அதற்கு பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவின் உறவு முறை பிள்ளை ஒருவர் கொழும்பு கத்தோலிக்க பாடசாலையில் கல்வி பயில்கிறார். அது தொடர்பில் ஆராயும் போது ஹரீன் பதற்றமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சட்டத்தரணி தெரிவிக்கையில், குறித்த பாடசாலையின் ரகர் விளையாட்டு குழுவானது கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று கொழும்பு சுகததாச மைதானத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பின்னர், கொச்சிக்கடை சாந்த தேவாலயத்திற்கு வழிபாடுகளுக்கு சென்றிருந்த போதிலும் குறித்த உறவு முறைப் பிள்ளை அன்றைய தினம் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைக் கேட்டதும் ஹரீன் பெர்னாண்டோ பதற்றமாக ஆவேசமாக நடந்து கொண்டதாகவும், பின்னர் ஆணைக்குழு கடும் எச்சரிக்கையுடன் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.