(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அரசியல் ஆசை வெறி இன்னும் குறையவில்லை என்றே கூற வேண்டும்.
பொதுவாக அரசியல் என்பது ‘நாளொன்றுக்கு ஒரு பேச்சு என்றாலும் நாளும் தருவோம் வாக்குறிதிகள்’ என்ற தொனியில் அமைந்துள்ளமையானது கசப்பான உண்மையாகும்.
பிரதித் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட ருவானுக்கும் இது விதிவிலக்கல்ல, இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
“.. நான் எதிர்காலத்தில் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடுவேன். கட்சி தற்போதைய தலைமையுடன் சில மாதங்கள் தொடரும், அதன் பின்னர் ஒரு புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார்.
இப்போது எனது ஒரே நோக்கம் கட்சியை மறுசீரமைத்து, கடந்த காலத்தில் கொண்டிருந்த பெருமைகளை மீண்டும் கொண்டு வருவதாகும். நான் நாட்டின் அனைத்து பகுதிக்கும் பயணித்து கட்சியை மறுசீரமைப்பேன்.
புதிய பதவிக்கு தன்னைத் தெரிவு செய்த கட்சித் தலைமை மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். பதவி நிலையை தீர்மானிக்க செயற்குழு உறுப்பினர்களிடையே ஒரு நல்ல விவாதம் இருந்தது, இறுதியில் வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு இரகசிய வாக்குப்பதிவு இருந்தது, எல்லாமே சுமுகமாக இறுதி செய்யப்பட்டது.
இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் எனக்கு 28 வாக்குகளும் ரவி கருணாநாயக்கவுக்கு 10 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. சக போட்டியாளர் ரவி கருணநாயக்கவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. கட்சியை பெரும் உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலயில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 2021ம் ஜனவரி வரைக்கும் தொடர்வார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.