(UTV | கொழும்பு) – எங்கள் மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை.
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ள நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படாமைக்கு எதிராக இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் எங்கள் மக்கள் கட்சியினால் ரீட் மனு மற்றும் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு அளிக்கும் தரப்பினராக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா, எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பிரதான செயலாளர் நிஷாந்த ரத்நாயக்க, எங்கள் மக்கள் சக்தியின் கட்சி என்பன சேர்ந்து குறித்த மனுவினை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த இரு மனுக்களிலும் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான நளின் அபேசேகர, ரத்னா ஜீவன் ஹூல் ஆகியோரும் தேர்தல் ஆணைக்குழுவும், எங்கள் மக்கள் சக்தியின் முன்னாள் தற்காலிக செயலாளர் வணக்கத்திற்குரிய வேதெநிகம விமலதிஸ்ஸ தேரர், வணக்கத்திற்குரிய அதுரெலிய ரதன தேரர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நிலைக்கு கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும் எங்கள் சக்தி மக்கள் கட்சியின் செயலாளர் வேதெநிகம விமலதிஸ்ஸ தேரர், தம்மை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரைத்து தேர்தல் ஆணைக்குழுவில் கடிதம் ஒன்றை ஏற்கனவே கையளித்திருந்தார்.
எனினும் கட்சியின் மத்திய செயற்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிப்பதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க வேதெநிகம விமலதிஸ்ஸ தேரர் கையளித்த கடிதம் செல்லுபடியாகாது என்று எங்கள் மக்கள் சக்தி கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்ததை அடுத்து தேர்தல் ஆணைக்குழு நீதிமன்ற உத்தரவினை நாடியிருந்தது. எனினும் இது த்ஜோடர்பில் எதுவும் இதுவரையில் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதுரலியே ரத்தன தேரர், கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோர் தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனினும், கட்சியின் செயலாளரான தேரர் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பதால், தேசியப் பட்டியல் ஆசனம் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுப்பது தொடர்ந்தும் தாமதமாகிக் கொண்டிருக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு :- இங்கு கூறப்படும் பழமொழிகள் வெறும் கற்பனையே, கிசுகிசுக்கு பொருந்தும் பழமொழிகளையே பயன்படுத்துகிறோம்.