(UTV | கொழும்பு) – கொவிட் 19 தாக்கம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இல 4021, 4022, 1001 மற்றும் 1002 ஆகிய 4 ரயில் சேவைகளையும் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
கல்கிஸ்ஸை – கொழும்பு கோட்டை முதல் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரை அதிகாலை 5.10 க்கு பயணிக்கும் 4021 இலக்க ரயில் மற்றும் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை முதல் கல்கிஸ்ஸை – கொழும்பு கோட்டை வரை பிற்பகல் 1.15 க்கு பயணிக்கும் 4022 இலக்க ரயில் ஆகிய ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த ரயில் சேவைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் செப்டெம்பர் முதலாம் திகதி வரை உரிய நேரத்தில் பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், கொழும்பு கோட்டை முதல் பதுளை நோக்கி பயணிக்கும் 1001 இலக்க ரயில், எதிர்வரும் 28, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் காலை 6.45க்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை முதல் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் 1002 இலக்க ரயில் எதிர்வரும் 29, 31 மற்றும் செப்டெம்பர் 01 ஆகிய திகதிகளில் காலை 6.45க்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ரயில் சேவைகளில் ஆசன ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.