(UTV|கொழும்பு)- 9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று(20) நடைபெறவுள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெறவுள்ளதுடன், முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அனையடுத்து, பாராளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களதும் சத்தியப்பிரமாணம் இடம்பெறவுள்ளது.
இம் முறை பாராளுமன்றத்திற்கு 80 இற்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றதும் பிற்பகல் 3 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, மீண்டும் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் கூடவுள்ளது.
ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டதன் பின்னர் பாராளுமன்றம் பிறிதொரு தினத்திற்கு ஒத்தி வைக்கப்படும்.
புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உத்தியோகபூர்வ நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளதுடன், இராணுவ அணிவகுப்பு, வாகன அணிவகுப்பு ஆகிய நிகழ்வுகள் இம் முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.