விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் : பார்சிலோனா அணி காலிறுதிக்கு தகுதி

(UTV | பார்சிலோனா) – கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ‘Round 16’ எனப்படும் நாக் அவுட் சுற்று ஒன்றில் பார்சிலோனா கிளப் (ஸ்பெயின்), நபோலி (இத்தாலி) அணியை பார்சிலோனா நகரில் நேற்று முன்தினம் இரவு எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 3-1 என்ற கோல் கணக்கில் நபோலியை தோற்கடித்தது. பார்சிலோனா அணியில் கிளைமென்ட் லெங்லெட் (10-வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (23-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மெஸ்சி 29-வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தார். ஆனால் வீடியோ மறுஆய்வு ரீப்ளேயில் அவர் பந்தை கைகளால் கையாண்டது தெரியவந்ததால் அந்த கோல் மறுக்கப்பட்டது.

இவ்விரு அணிகள் இடையே நடந்த முதலாவது லீக் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்திருந்தது. இதையடுத்து இரு ஆட்டங்கள் முடிவின் அடிப்படையில் பார்சிலோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் நபோலியை வெளியேற்றி தொடர்ந்து 13-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு ஆட்டத்தில் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்சியாவை (இங்கிலாந்து) பந்தாடியது.

ஏற்கனவே முதலாவது லீக்கிலும் பேயர்ன் முனிச் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டிருந்ததால் சிக்கலின்றி கால்இறுதியை உறுதி செய்தது.

கால்இறுதி ஆட்டங்களில் அடலன்டா (இத்தாலி) -பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), லெப்ஜிக் (ஜெர்மனி)- அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), பார்சிலோனா-பேயர்ன் முனிச், மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)-லயன் (பிரான்ஸ்) ஆகிய அணிகள் மோதுகின்றன.

Related posts

அவிஷ்கவுக்கு சத்திரசிகிச்சை

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

(படங்கள்)-ஆசிய வலை பந்தாட்டப்போட்டி – சம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை