உலகம்

மலேசிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபணம்

(UTV | மலேசியா) – மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் தொடுக்கப்பட்ட 5 வழக்குகளின், முதல் வழக்கில் அவர் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக இன்று(28) அந்நாட்டு நீதிமன்றம் தெரிவித்தது.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு குற்றம், 3 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள், எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் (S$13.6 மில்லியன்) பண மோசடி தொடர்பான 3 குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் தொடர்பில் நஜிப், 67, குற்றமிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான் முகமது கஸாலி தெரிவித்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்துக்கு வெளியே ஆதரவாளர்களின் வாழ்த்து கோஷங்களுக்கிடையே, காலை 10 மணியளவில் நீதிமன்றத்துக்கு வந்தார் நஜிப்.

முகக்கவசம் அணிந்து, கட்சித் தலைவர்கள் புடைசூழ, நீதிமன்றத்துக்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

“என் மீதான களங்கத்தைத் துடைக்க இது ஒரு வாய்ப்பு. நீதிமன்றத்தின் முடிவு எதுவாக இருந்தாலும் இங்கேயே அது முடிந்துவிடாது,” என்று நேற்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 5 மாதங்களாக மலேசியாவின் பிரதமராக இருக்கும் முஹைதீன் யாசின், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகளில் தலையிடுவதில்லை என்ற கடப்பாட்டை, இன்றைய இந்த தீர்ப்பு காட்டுவதாகக் கூறப்படுகிறது.

1எம்டிபி தொடர்பில் நஜிப் மீது தொடுக்கப்பட்டுள்ள 5 வழக்குகளில் அவர் 42 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த நிலையில், மலேசிய வருமான வரித்துறைக்கு 1.69 மில்லியன் ரிங்கிட் நிலுவை வரியைச் செலுத்துமாறு மலேசிய நீதிமன்றங்கள் அண்மையில் நஜிப்புக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!

அமெரிக்காவில் சூறாவளி – 19 பேர் உயிரிழப்பு

அடங்கினார் இளவரசர் சார்லஸ்