(UTV | கொழும்பு) – கைத்தொழில் அபிவிருத்தி சபை மூலம் (IDB) குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டின் கொலொஸஸ் தனியார் நிறுவனத்துக்கு செம்பு வழங்கியதாக, அந்த நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அடிக்கடி விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைக்கின்றனர்.
ஆனால், குண்டுதாரி இன்ஷாப் அஹமதுக்கு சகாய விலையிலும் அதிகளவிலும் செம்பு வழங்குமாறு வேண்டுகோள் கடிதம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுசன தொடர்பு அதிகாரி, அப்போதைய பாதுகாப்பு அமைச்சரின் மேலதிக செயலாளர் உட்பட முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஆகியோரை, இதுவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தவில்லை என்று மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தருமான பாயிஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
செம்பு கொடுக்கல் வாங்கல் தொடர்பில், இந்த விடயங்களில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டுமென குற்றப்புலனாய்வு பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வேதசிங்கவிடம், முறைப்பாடு ஒன்றை பதிவு செய்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்தார்.
“வன்னியில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனை, அடிக்கடி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு வரவழைத்து, அவரை விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர். கைத்தொழில் அபிவிருத்தி சபையானது ஏனைய நிறுவனங்களுக்கு செம்பு வழங்கியது போன்றே, கொலொஸஸ் நிறுவனத்துக்கும் அப்போது செம்பு வழங்கியிருக்கிறது.
ஆனால், கொலொஸஸ் நிறுவனத்துக்கு சகாய விலையில் ஆயிரம் கிலோ கிராம் செம்பு வழங்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுசன தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பெரமுனவின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான சாந்த பண்டார, சிபாரிசு கடிதம் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
அத்துடன், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் மேலதிக செயலாளர் சரத் குமார, ஆயிரம் கிலோ கிராம் செம்பை கைத்தொழில் அபிவிருத்தி சபையிடமிருந்து கொள்வனவு செய்யுமாறு, குண்டுதாரி இன்ஷாப் அஹமட்டின் நிறுவனத்துக்கு பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அமரசிங்க, கொலொஸஸ் நிறுவனத்துக்கு ஆயிரம் கிலோகிராம் செம்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குண்டுதாரி இன்ஷாபின் இந்த நிறுவனத்துக்கு செம்பை வழங்குமாறு சிபாரிசுக் கடிதமும், பரிந்துரைக் கடிதமும், வேண்டுகோள் கடிதமும் சென்றுள்ள போதும், இது தொடர்பில், சம்பந்தப்பட்ட மேன்மட்ட அதிகாரிகள் எவரும், இதுவரையில் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்படவுமில்லை. இந்த விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.
ஆனால், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மட்டும் திரும்பத் திரும்ப விசாரணைக்கு அழைக்கின்றனர். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற நோக்கத்துக்கு மாறாக, எமது கட்சியின் தலைவரை மட்டும் விசாரணை செய்வதும், அவரை மன உளைச்சலுக்கு தொடர்ந்தும் உள்ளாக்கி வருவதும், வெறுமனே அரசியல் பழிவாங்கலே.
இது தொடர்பான விசாரணை வேறு கோணத்தில் செல்வதாகவே நாம் கருதுகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும். உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இருந்தபோதும், இந்த செம்பு வழங்கல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் பொதுசன தொடர்பு அதிகாரி, முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் மேலதிகச் செயலாளர் ஆகியோரை உடனடியாக அழைத்து, விசாரணை செய்ய வேண்டுமென, நாம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நுவன் வேதசிங்கவிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.