உள்நாடு

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி

(UTV|கொழும்பு)- சிறுபான்மைச் சமூகங்களை அச்சுறுத்தி, பிரித்தாண்டு பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெறத் துடிப்போரைத் தோற்கடிப்பதற்கு, தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் நேற்று (01) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்ததாவது;

சிறுபான்மையினர் பயமுறுத்தப்படும் ஒரு சூழலில் நாம் இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பேரினவாதிகளின் விருப்புக்கேற்ப செயற்படாததாலே எங்களைத் தொடர்ந்தும் அச்சுறுத்தியும், அடிபணிய வைத்தும் நெருக்குவாரங்களைத் தருகின்றனர். சகல சமூகங்களும் ஒற்றுமையாக வாழும் வன்னி மாவட்டத்தில் இன, மத, மொழி ரீதியாக எமது மக்களைப் பிரித்து, எங்களைத் தோற்கடிப்பதில் பேரினவாதிகள் கங்கணம்கட்டிக் களமிறங்கியுள்ளனர். இதற்காகப் பணம் வழங்கி, பசப்பு வார்த்தைகள் பேசி, பொய்யுரைத்து முயற்சிக்கப்படுகிறது. இதுபற்றி எமது மக்களைத் தொடர்ந்து தெளிவூட்டி வருகின்றோம். இதற்காகத்தான் எங்களைச் சிறையிலடைக்கவும் கைது செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. எங்கள் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்து, நாங்கள் நிரபராதிகள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

இன மோதல்களில்லாத, மத முரண்பாடுகளில்லாத, சமூகக் குரோதங்களில்லாத அழகிய இலங்கையை உருவாக்க வேண்டும். மீண்டும் இரத்த ஆறுகள் இந்த நாட்டில் ஓடக்கூடாது. இதைத்தான் எமது பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ விரும்புகின்றார். எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வன்னிச் சமூகம் ஒற்றுமைப்பட்டு வாக்களித்தது போன்று, இம்முறையும் தொலைபேசிச் சின்னத்திற்கு வாக்களிப்பது அவசியம்.

அற்ப ஆதாயங்களுக்கு பேரினவாதிகள் வழங்கும் சலுகைகளுக்கு சோரம்போனால், பேரினவாதம் எம்மை அடக்கியாளப் படையெடுக்கும். எனவே, இப்பயங்கர நிலைமைகள் ஏற்படுவதைத் தடுக்க, வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் எங்களை ஆதரித்து, தொலைபேசிச் சின்னத்தை வெற்றியடையச் செய்வது அவசியம். முதலாம் இலக்கமான எனக்கும், ஏனைய சகோதரர்களின் இலக்கங்களுக்கும் வாக்களிக்குமாறு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம், வேட்பாளர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக், மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பாயிஸ், ரிப்கான் பதியுதீன், பிரதேச சபை தலைவர்களான சுபியான், முஜாஹிர் உட்பட பல அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு –

Related posts

தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

editor

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!