(UTV | கொழும்பு) – இஸ்லாத்துக்கு எதிராகவும் இஸ்லாமிய தஃவா அமைப்புக்களுக்கு எதிராகவும் ஞானசார தேரர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதால், அவரது குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசரணைக்கு அழைத்து, உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்க முடியுமென, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் மோசமான, பிழையான கருத்துக்களை சில ஊடகங்களும் தூக்கிப்பிடித்துகொண்டு காவித் திரிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான செயற்பாடுகளினால் பெரும்பான்மையின மக்கள், இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்படைந்து, அதன் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளும் பிரச்சினைகளும் ஏற்பட காரணமாக அமைந்துவிடுமோ என தாம் அச்சமடைவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஞானசார தேரர் குற்றஞ்சாட்டுபவர்களை விசாரணைக்கு அழைப்பது மாத்திரமின்றி, அவர்களின் கருத்துக்களுக்கு உரிய பிரச்சாரங்களையும் வழங்க, ஜனாதிபதி ஆணைக்குழு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட், தனது சாட்சியத்தில் மேலும் வேண்டுகோள் விடுத்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று(19) சாட்சியமளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி செயலகம் அனுமதி மறுத்திருந்த இன்சாப் இப்ராஹிமின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான அனுமதியை, தனது அமைச்சினூடாகப் பெற முயன்ற அவரின் அத்தனை முயற்சிகளையும் தான் முற்றாக நிராகரித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இன்சாப் இப்ராஹீம், தனது அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் (Letter of demand) அனுப்பியிருந்தார்.
இன்சாப் இப்ராஹிமின் ஏற்றுமதிப் பொருட்களுக்கான அனுமதியை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியிருந்தது. இவ்வனுமதியை எனது அமைச்சினூடாகப் பெறும் நோக்கில், எனது அமைச்சுக்கு வந்து, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
இவ்விடயம் கை கூடாததால், எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனைத் தொடர்புகொண்டு, தனது நிலைமைகளை விளக்கியுள்ளார். ஏற்றுமதிகள் தடைப்பட்டதால் கம்பனியில் பணியாற்றுவோருக்கு சம்பளம் கூடக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பான அமைச்சரான உங்களது சகோதரரிடம் பேசி, அனுமதியைப் பெற்றுத்தருமாறும் இன்சாப் இப்ராஹீம், எனது சகோதரரான ரியாஜ் பதியுதீனைக் கேட்டுள்ளார்.
இது தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஆறு உள் தொலைபேசி அழைப்புக்களை, அவர் எனது சகோதரருக்கு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், எனது சகோதரர் ஒரு அழைப்பையாவது இன்சாப் இப்ராஹிமுக்கு எடுக்கவில்லை.
வியாபாரத் தொடர்பில் தெரிந்தவராகவும், எனது ஊரவர் ஒருவரின் நெருங்கிய உறவினருமாகவும் அறிமுகமான இன்சாப் இப்ராஹிமின் வேண்டுகோள் தொடர்பில், எனது சகோதரர் என்னை தொடர்புகொண்டு கேட்டபோது, ஜனாதிபதி செயலகம் அனுமதி மறுத்த விடயத்தை, என்னால் செய்ய முடியாதெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்.
இதுபற்றி அறிந்த இன்சாப் இப்றாஹீம் ஆத்திரமடைந்தவராக, எனது சகோதரரிடம் தொலைபேசியில் என்னை ஏசியதுடன், கோரிக்கை கடிதம் (Letter of demand) அனுப்பவுள்ளதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்டது போல 2019.04.03 இல் அக்கடிதம் (Letter of demand) எனது அமைச்சுக்கு வந்தது. அவருக்கு வேண்டப்பட்டவராகவோ, விருப்பமுடையோராகவோ நாம் இருந்திருந்தால், எங்களை ஏசியது மட்டுமன்றி, சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதமும் (Letter of demand) அனுப்பியிருக்கமாட்டார்.
இன்சாப் இப்ராஹிமுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக, 2020 ஏப்ரல்14 ஆம் திகதியன்று ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இன்சாப் இப்ராஹிமுடன் 250 தடவைகள் தொலைபேசியில் உள், வெளி அழைப்புக்களால் தொடர்புற்றிருந்த ஒருவர், கைதான தினமே விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், 600 தடவைகள் தொடர்பு கொண்டவரும் சில நாட்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், வெறும் ஆறு உள் அழைப்புக்கள் மாத்திரமே வந்திருந்த எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை மட்டும், இரண்டு மாதங்களாகத் தடுத்து வைத்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடுகளே இவை.
அரசியலுக்காக எனது சகோதரர் போன்ற அப்பாவிகள் பழிவாங்கப்படுவது பெரும் கவலையளிக்கிறது. இந்நாட்டில் நீதி, நேர்மை நிலைக்கும் போது, உண்மை வெளிவந்து, சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று சுமார் ஏழு மணி நேரம், இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விசாரணை செய்தது. இதன் போது, ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனது குடும்பத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லையென, அவர் தகுந்த ஆதாரங்களுடன் சாட்சிகளை முன்வைத்திருந்தார்.
ஊடகப்பிரிவு-