உள்நாடுசூடான செய்திகள் 1

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்

(UTV| கொழும்பு) – பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளையோர்களுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி முறையாக இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களைத் தேடி வரும் கல்வி முறைமையே தேவையாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரிலேயே மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைக் கல்வி முறைமையை மேலும் மேம்படுத்துவதற்கு இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர் சமூகத்தில் 30 வீதத்தினரையாவது ஒன்லைன் அதாவது இணைய வழிக் கல்விக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் வெளிநாடுகளில் கல்வி கற்றுவந்த ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்களை கொரோனா பரவலுடன் நாட்டுக்கு அழைத்து வர வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இவ்வளவு அதிகமான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நல்ல அறிகுறியல்ல என்றும் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பு

“கொள்கைகள் தொடர்பில் விவாதம் நடாத்தினால் எமக்கும் சந்தர்ப்பம் வேண்டும்” நாமல் ராஜபக்‌ஷ

இன்றைய வானிலை…