(UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் (IOM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சம்மேளனம் (IFRC) ஆகியவற்றினூடாக 1,212,500 அமெரிக்க டொலர்கள் (சுமார் 230 மில்லியன் ரூபாய்) தொகையை நிதி உதவியாக வழங்கியுள்ளது.
பிரதான இடர் தொடர்பாடல் தகவல்களை கட்டமைப்பதற்காகவும், அத்தியாவசிய சுகாதார மற்றும் தூய்மையாக்கல் தயாரிப்புகளின் விநியோகங்களினூடாக தொற்றுக்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவுதல், தனிமைப்படுத்தும் அலகுகளை மறுசீரமைப்பது மற்றும் சிறுவர்கள் கல்வி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகளை தடைகளின்றி முன்னெடுப்பதை உறுதி செய்வது போன்றவற்றுக்காக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துக்கு (UNICEF) 500,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் மக்களின் உள்ளக மற்றும் எல்லைப்பகுதி ஒழுங்கிணைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய தடைகளை இல்லாமல் செய்து, ஆதாரபூர்வமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்துவது, அவர் எதிர்நோக்கும் அழுத்தம், பாகுபாடு மற்றும் மொழிப் பிரச்சனைகளை இல்லாமல் செய்வது மற்றும் பிரவேசிப்பு துறைப் பகுதிகளில் சுகாதாரம் மற்றும் எல்லைப் பாதுபா்பு முன்னாயத்த செயற்பாடுகளுக்கு உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காக புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனத்துக்கு (IOM) 422,500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
சமூகத்துக்கு சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான தகவல்களை பகிர்ந்தளிப்பது, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உளச்சமூக உதவிகளை பெற்றுக் கொடுப்பது, முன்னிலை தன்னார்வ மற்றும் ஊழியர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளர்களுக்கு தினசரி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தடுப்பு, பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சம்மேளனம் (IFRC) ஊடாக 250,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்காக, இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சுகாதார மற்றும் மருத்துவ பராமரிப்பு திறன்களை கட்டியெழுப்புவதற்காக இந்த மூன்று சர்வதேச அமைப்புகளினூடாக இந்த நிதி உதவியை வழங்குவதற்கான அனுமதியை ஜப்பானிய அரசாங்கம் மார்ச் 10 ஆம் திகதி வழங்கியிருந்தது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இந்த பங்களிப்பு பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என ஜப்பானிய அரசாங்கம் எதிர்பார்ப்பதுடன், பொருளாதார மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்துவது அடங்கிய சமூக ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஜப்பானிய அரசு தன்னை உறுதியாக அர்ப்பணித்துள்ளது.