உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரசு அதனை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்காக ஆற்;றிய விசேட உரையில் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

நான் உங்கள் மத்தியில் உரையாற்றுவது கொரோனா தொற்றுக்கு எதிராக எமது அரசாங்கம் மக்களும் பாரிய யுத்தம் போன்ற பாரிய அச்சுறுத்தல் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் சந்தர்பத்திலேயேயாகும். உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த நோய் தொற்றுக்கு எதிராக போராடும் முறையும், அந்த நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்களின் சடலங்கள் மயானங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் முறையையும் நீங்கள் செய்திகளின் ஊடாக காண்பீர்கள்.

நாம் வாழ்வதா இல்லையா என்பதை தீர்மானிப்பது இந்த வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைக் முன்னெடுக்கும் முறையிலேயே உள்ளது. எங்களது அவதானம், எங்களது அர்பணிப்பு, ஒழுக்கம் என்பவற்றின் அடிப்படையில் தான் இவ்வாறான பாரிய நோய் தொற்றில் இருந்து நாங்கள் வாழ்வதா, சாவதா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.
அதனால் இந்த நோய் தொற்று உலகிற்கு தெரிய வந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஜனாதிபதியுடன் அரசாங்கமும் மக்களின் வாழ்வு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளது.

இந்த நிலையை புரிந்து கொண்டதினால் தான் சீனாவில் வூஹான் நகரில் சிக்கியிருந்த இலங்கையர்களை, உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்னர் விமானம் ஒன்றை அனுப்பி எமது நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தோம். அவர்களை அழைத்துவரும் போது நாம் எமது நாட்டில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை அமைத்து விட்டோம். அந்த சந்தர்ப்பத்தில் இருந்து இலங்கைக்கு வரும் நூற்றுக்கணக்கானவர்களை தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் பலவற்றிற்கு மிகவும் குறுகிய காலத்தில் அனுப்புவதற்கு ஏற்ற வகையில் மத்திய நிலையங்களை ஏற்படுத்தினோம். தற்போது ஒரே சந்தர்ப்பத்தில் ஆயிரக்கணக்கானோரை தனிமைப்படுத்தக் கூடிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் சுமார் 40 வரை எம்மால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் வெறுமனே தங்கும் இடங்கள் மாத்திரம் அல்ல சிறந்த மட்டத்தில் உள்ள கட்டடங்கள், கட்டில்கள், வைத்தியர்கள், உதவியாளர்கள், மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்கள், மலசலகூட வசதி, சுகாதார முறையிலான உணவு, சுத்தமான குடிநீர் மாத்திரம் இன்றி கொத்தமல்லி அவித்து ஆயிரக்கணக்கானோருக்கு 14 நாட்களும் எவ்வித குறைவும் இன்றி பெற்று கொடுக்கப்படுகின்றது. முகம் சுளித்துக்கொண்டு தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு செல்லும் நபர்கள் இன்று புன்னகையுடன் வெளியே வருவது அங்கு எந்த குறையும் இல்லாமல் அவர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படுகின்றமையால் தான். அதே போன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விசேட வைத்தியசாலையை நாங்கள் 6 நாட்களில் வெலிகந்தையில் நிர்மாணித்தோம்.

அது மாத்திரமல்ல, இலங்கைக்கு வருபவர்களை பரிசோதனை செய்து நோய் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஆயிரக்கணக்கான நபர்களை அடையாளம் கண்டு அவர்களின் வீடுகளுக்கு சென்று வீடுகளிலேயே வைத்து தனிமைப்படுத்தலை மேற்கொள்ள நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். தனிமைப்படுத்தலை புறக்கணிக்கும் ஆயிரக்கணக்கானவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து சமூகத்தை காப்பாற்றுவதற்காக அரச புலனாய்வு பிரிவினரை ஈடுபடுத்த ஜனாதிபதிக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள், முதல் கொரோனா நோயாளியை அடையாளம் கண்டவுடனேயே சகல பாடசாலைகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். இது தொடர்பில் ஜனாதிபதி விசேட படையணியொன்றை ஆசிய வலய நாடுகளில் முதலில் ஸ்தாபித்தது நாங்களே. தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் எங்களுக்கு கொள்கையாக காணப்பட்டது மக்களை சிரமத்துக்குள்ளாக்காமல் மக்களின் தேவைகளை பூரணப்படுத்துவதே. அதனால் நாங்கள் யுத்த காலத்தில் கூட முழுமையாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினோம்.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமையினால் எங்களது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வியாபார நிலையங்கள் அதேபோன்று அரச காரியாலயங்களை மூடுவதற்கான நிலை ஏற்பட்டமை உங்களுக்கு தெரியும். அப்படி ஏற்பட்டாலும் மக்களின் வாழ்வியலுக்கு எவ்வித குறைவும் ஏற்படாத வகையில் அவர்களின் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான நிலையை பேணும் மிக முக்கிய பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது.
மின்சாரம், குடிநீர், எரிவாயு என்பனவற்றை குறைவில்லாமல் விநியோகிப்பதற்கான பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடு முழுவதும் பகிர்ந்தளிப்பதற்கான பொறுப்பை ஜனாதிபதி மற்றும் எனது வழிக்காட்டலின் கீழ் அலரி மாளிகையில் இருந்து அதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதோடு அத்தியாவசிய சேவை தொடர்பாக ஜனாதிபதி விசேட படையணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதேபோன்று குறித்த செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுகின்றனவா என்பதை ஆராய்வதற்காக நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம்.

உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த எடுக்ககூடிய சகல செயற்பாடுகளையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். 4 இலட்சத்து 10 ஆயிரம் பேர் வரை முதியோர் நிவாரணங்களை பெறுகின்றனர். எனினும் நாம் 4 இலட்சத்து 42 ஆயிரம் முதியோர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் கொடுப்பனவை வழங்கியுள்ளோம். அதற்கு மேலாக அங்கவீனமானவர்களின் வாழ்வியல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியேற்பட்டது. 22 ஆயிரம் அங்கவீனமானவர்கள் அதற்கான கொடுப்பனவை பெற்று வந்தார்கள். மேலும் 38 ஆயிரம் பேருக்கு ஐயாயிரம் ரூபாயை வழங்கியுள்ளோம். விவசாயிகள் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நாம் கொடுப்பனவு வழங்கியுள்ளோம். அதேபோன்று 4600 மீனவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் காணப்பட்டார்கள். காத்திருப்புப் பட்டியலில் இருந்த 13,850 பேருக்கும் கொடுப்பனவை வழங்கினோம். கர்ப்பிணித் தாய்மார்கள், மந்த போசனத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் அரச சேவையாளர்களின் ஊடாக திரிபோஷ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் ஓய்வூதியதாரர்கள் 6 இலட்சத்து 45 ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அரச நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளமையினால் அரச சேவையாளர்கள் 15 இலட்சம் பேர் வீடுகளில் உள்ளனர். எனினும் குறித்த 15 இலட்சம் பேருக்கும் ஏப்ரல் மாத சம்பளத்தை வழங்குவதற்கு இப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு முடிந்துவிட்டது. அது மாத்திரமல்ல. வேலையற்ற பட்டதாரிகள் 40 ஆயிரம் பேரை நாம் அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தோம். அவர்களை இந்த தனிமைப்படுத்தல் செயற்பாடுகளில் இணைத்துக் கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அது மாத்திரமன்றி சமுர்த்தி பயனாளர்கள் நாட்டில் 17 இலட்சம் பேர் உள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் மேலும் 6 இலட்சம் பேர் இருக்கின்றார்கள். குறித்த 23 இலட்சம் பேருக்கும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

நாம் இப்படி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள வர்த்தகத்துறை தொடர்பிலும் நினைத்துப் பார்க்க வேண்டியேற்பட்டது. இந்நாட்டில் முச்சக்கரவண்டி, பாடசாலை பஸ் வண்டி, வேன்களின் ஊடாக தொழிற்துறையை முன்னெடுக்கும் 15 இலட்சம் பேர் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் நாம் தங்களது வாகனங்களுக்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கான நிவாரணத்தை வழங்கியுள்ளோம். ஊரடங்கு சட்டம் காரணமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி தற்போது சிறிய மற்றும் மத்தியதர வியாபாரங்களுக்கு நிவாரணங்களை வழங்க ஆரம்பித்துள்ளது.

நாம் இவ்வாறான நிதியை ஒதுக்கி மக்களுக்கு சலுகைகளை பெற்றுக் கொடுத்தது பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றி அல்ல. இவற்றில் ஒன்றையாவது மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புக்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இடைக்கால வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் எங்களுக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை. அவ்வாறான நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதனால் என்ன பயன் ஏற்படப் போகின்றது என இறையாண்மையுள்ள மக்கள் இப்போது எங்கள் எல்லோரிடமும் கேட்கின்றார்கள்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு எங்களது வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ளமை முழு உலகிற்கும் தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் 50 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு அரசாங்கத்தின் நேரடி நிவாரணம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் விவாதங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை. நாட்டில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு நாங்கள் நிவாரணத்தை வழங்கியது நாட்டின் வருமானம் சிறந்த முறையில் இருந்த போது அல்ல. இப்போது அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கப்பெறும் சகல வழிகளும் சூனியமாகிவிட்டன.

இந்த வைரஸ் பரவல் காரணமாக எங்களது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவது தடைப்பட்டுள்ளது. அவ்வாறு தடைப்பட்;டது நாட்டுக்கு வருமானம் கிடைக்கும் பிரதான வழியாகும். தற்போது சர்வதேசத்தில் தேயிலைக்கு ஏலம் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எங்களது தேயிலை, தேங்காய், இறப்பர் ஆகிய மூன்று உற்பத்திகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாது. இத்தாலி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணியாளர்கள் அனுப்பும் பணம் எங்களது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய பங்காகும். அந்த வருமானமும் கொரோனா நோய் தாக்கம் காரணமாக இலங்கைக்கு கிடைக்கப்பெறாது.

உலகம் முழுவதும் சுற்றுலா தொழிற்துறை பாதிப்படைந்துள்ளது. சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தொடக்கம் எங்களது கடற்கரை சிப்பிகளுக்கும் கூட பாதிப்பு ஏற்படும். தற்போது உலக நாடுகளை போன்று எங்களது நாட்டில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள், உணவு விடுதிகள் போக்குவரத்து துறைகள் என்பன சீர்குலைந்துள்ளன. அவ்வாறான நிலையின் கீழ் தான் எங்களுக்கு இந்த நோய் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் நாம் இல்லையென்று சொல்ல மாட்டோம். மக்களுக்கு முடியாது என்று சொல்ல மாட்டோம். இந்த போரை நாம் கைவிடப் போவதில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அரசியல், இனம், மதம் என்ற ரீதியில் நினைத்து தீர்மானங்களை எடுத்ததில்லை. எடுக்கவும் போவதில்லை. சகல அரசியல் கட்சித் தலைவர்களும் மிகவும் ஆர்வத்துடன் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த தருணம் இது. மதம், இனம் என்ற ரீதியில் பிரிந்து செயற்படக் கூடிய காலம் அல்ல. இந்த நேரத்தில் எங்களுக்கு இருக்க வேண்டியது ஒரே எதிரி மாத்திரமே. அது கொரோனா எனும் எதிரியே. நாங்கள் எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் இந்த உண்மையை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மகாநாயக்க தேரர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பக் பௌர்ணமி தினத்தில் விஹாரைகளுக்கு வர வேண்டாம் என்று. இதுபோன்று மனிதர்கள் தொடர்பில் அன்பு செலுத்தக்கூடிய வகையிலான கருத்து தான் இது. அதனால் நாம் அனைவரும் வாழும் நபர்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். இது மதத்துக்கும் இனத்துக்கும் விசேட தேவைகளையும் சடங்குகளையும் நிறைவேற்றும் நேரமல்ல. இது நாடு தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம். பொதுவாக மனிதர்கள் என்ற ரீதியில் சிந்தித்தால் மாத்திரமே எங்களுக்கு இந்த புதை குழியில் இருந்து மறுபக்கத்துக்குப் பாய்ந்து செல்ல முடியும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள், மனைவி ஆகியோர் வீட்டில் இருக்கும் போது தனக்கு நோய் தொற்று ஏற்படும் என்பதை தெரிந்துக் கொண்டே நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் சுகாதார துறை ஊழியர்கள் எங்களுக்கு இருக்கின்றார்கள். ஒருசில வைத்தியர்கள் தனது உடலில் கொரோனா பொசிடிவ் ஏற்படும் வரை வைத்தியசாலையில் இருந்து செல்ல போவதில்லையென குறிப்பிட்டு தொழில் புரிகின்றனர். வேறு நாடுகளில் முக கவசம் வழங்கப்படவில்லையென குறிப்பிட்டு சேவையை தூக்கியெறிந்து சென்ற தாதியர்கள் இருக்கின்றார்கள். எனினும் நாம் பெருமையோடு கூறுகின்றோம் எங்களது நாட்டில் தங்களுக்கான முக கவசத்தை அவர்களே தைத்துக் கொண்டு பொறுப்புடன் சேவை புரியும் தாதி பரம்பரையினர் இருக்கின்றார்கள் என்று. வைத்தியசாலையின் உப ஊழியர்கள், நோயாளி காவு வண்டியின் சாரதிகள் எந்தவொரு நோயாளியையும் கைவிடவில்லை. அதேப்போன்று மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கூட கவனத்திற் கொள்ளாமல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று சேவையாற்றும் சுகாதார பரிசோதகர்கள் எங்களுக்கு உள்ளார்கள். நீங்களும் நானும் வாழ்வது அவ்வாறான சுகாதார சேவையுள்ள நாட்டிலேயே. அதேபோன்று ஏனைய அனைத்து சேவைகளையும் பொறுப்புடன் நிறைவேற்றும் அரச சேவையாளர்களை ஞாபகப்படுத்த வேண்டும். அதேபோன்று எங்களது மாகாண மட்டத்திலான நிர்வாகத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களை நாங்கள் பாராட்ட வேண்டும்.

அன்று தங்களுக்கு மரணம் ஏற்படப் போகின்றது என்பதை தெரிந்து கொண்டே முப்படை பொலிஸ் சேவையில் இணைந்த இளைஞர்கள் இன்று எந்த இடத்தில் வைரஸ் இருக்கின்றது என்பதை தேடிச் செல்கின்றனர். தங்களின் இருப்பிடங்களை நோயாளிகளுக்கு வழங்கிவிட்டு அவர்கள் சீமெந்து தரையில் தூங்குகின்றனர். அது மாத்திரமன்றி எங்களது இலட்சக்கணக்கான பிள்ளைகள் இந்த கொரோனா வைரஸூக்கு எதிரான செயற்பாட்டுக்கு உதவி வழங்குவதற்காக நாங்கள் அழைக்கும் வரை வீடுகளில் தயாராக இருக்கின்றார்கள். அவ்வாறான நாட்டில் நீங்கள் தனிமைப்பட மாட்டீர்கள்.

நாங்கள் நீண்ட காலம் எடுத்துக்கொள்ளாமல் விரைவாக இந்த நோய்த் தொற்றை வெற்றி கொள்ள வேண்டும். அதேபோன்று உங்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நான் உங்களிடம் பணிவாக கேருகின்றேன். இந்த நோய்த் தொற்றைத் தோற்கடிக்கும் முறை தொடர்பில் எங்களுக்கு இப்பொழுதே சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் உற்பத்திக்கு, விநியோகத்திற்கு, வர்த்தகத்திற்கு, அரசாங்கத்தின் தலையீட்டை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் கடந்த கால அரசாங்கம் செயற்பட்டது. இன்று எங்களுக்கு கூட்டுறவுத் துறை ஞாபகம் வருகின்றது. உணவு பானங்களைப் போன்று பட்டத்தை கூட வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து இலாபம் என்று சொல்லும் எண்ணத்துக்கு அமையத் தான் அந்த அரசாங்கங்கள் வேலைசெய்தன. தன்னிறைவான வீட்டுக்காக நாம் ஏற்படுத்திய வீட்டுத் தோட்ட பயிர்களைப் போன்று வயல் நிலங்களின் பயிர்ச் செய்கை என்பன கடந்த யுகத்தில் சரிவடைந்தன. இப்பொழுது தான் மீண்டும் இந்த நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். கொழும்பு நகரில் இருந்து தொலைதூரமுள்ள கிராமங்கள் வரை சகல வீட்டு தோட்டங்களிலும் பயிர் செய்ய தயாராகும் சத்தம் எங்களுக்கு கேட்கின்றது. எங்களுக்கு தேவையான உணவை நாங்களே உற்பத்தி செய்வதற்கு மக்கள் தயாராகியுள்ளது எங்களுக்கு தெரிகின்றது. நாங்கள் அந்த எல்லா செயற்பாடுகளையும் வலுப்படுத்துவோம். தேசிய கொடியை வெளிநாடுகளில் இருந்து தைத்து கொண்டு வந்த நாம், எங்களுக்கு தேவையான முக கவசங்களை நாங்களே தைப்பதற்கு ஆரம்பித்து விட்டோம். எங்களின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு தேவையான கட்டில்களை எங்களது இளைஞர்கள் தயாரிக்கின்றார்கள். ஒருசில இளைஞர்கள் நோயாளிகளுக்காக ரோபோ இயந்திரங்களைக் கூட தயாரிக்கின்றார்கள். இதன் ஊடாக எங்களால் முடியுமென்பது தெளிவாக புரிகின்றது. நாடு தொடர்பில் சிந்திக்கும் இவர்கள் தொடர்பில் நான் பெருமையடைகின்றேன். அதனால் நாம் கொரோனா வைரஸ் தொற்றை தோற்கடித்து எங்களது உணவை நாங்கள் உற்பத்தி செய்து எங்களது தொழிற்துறைகளை மேம்படுத்தி எங்களது பலத்தை உலகத்துக்கு காட்ட பலம் பொருந்திய நாடாக மீண்டெழ வேண்டும்.

வரலாற்றில் நாங்கள் இதனை விட பாரதூரமான கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றோம். பயங்கரவாதம் இருந்த காலப்பகுதியில் 20, 30 வருடங்களுக்கு முகாம்களில் வாழ்ந்திருக்கின்றோம். பிள்ளைகளுடன் மரண பயத்தில் நடு இரவில் இலை குழைகளை விரித்தும் உறங்கியிருக்கிறோம். அவ்வாறு அர்ப்பணித்த உங்களுக்கு நாட்டுக்காக இந்த காலப்பகுதியில் வீட்டில் இருப்பது பெரிய விடயமில்லையென நான் நினைக்கின்றேன். நாட்டுக்காக அர்ப்பணிக்குமாறு நான் எனது அன்புக்குரிய மக்களிடம் கேட்கின்றேன். வேறு நாடுகள் முகங்கொடுத்துள்ள அனர்த்தங்களைப் போன்று முகங்கொடுக்காமல் மீண்டெழ முடியுமென நான் நினைக்கின்றேன். நாங்கள் முன்னேறிய இனத்தவர்கள் என்ற அடிப்படையில் மாத்திரமன்றி சுகதேகிகளான இனத்தவர்களாக மீண்டெழ வேண்டும்.
உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் அமையட்டும்.
மும்மணிகளின் ஆசி உண்டாகட்டும்.

Related posts

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை