உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தீர்வு

(UTVNEWS | COLOMBO) -நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சேவைகளில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு கீழ் கண்டவாறு தெரிவித்துள்ளது

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒழிப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய செயன்முறைகள் தொடர்பிலும் தற்போது அந்த செயன்முறைகளில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கடந்த 29 ஆம் திகதி  கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 20 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் கொரோனா வைரஸை முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்து நிபந்தனைகள் இன்றி ஒத்துழைப்பை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

எனினும் இம் மாதம் முதலாம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால், கொரோனா ஒழிப்பு செயற்பாடுகளுக்காக இணைந்துள்ள அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள  4 பிரதான பிரச்சினைகள் மற்றும் அவர்களது சேவைகளுக்காக அரசாங்கத்தினால் குறைந்தபட்ச ஏற்பாடுகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டதோடு,  இதற்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (04) முதல் அனைத்து சேவைகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 29 ஆம் திகதி தொழிற்சங்கங்களுடனான சந்திப்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை முன்வைத்த போது, பொது சுகாதார பரிசோதகர்களுக்கான முகக்கவசம், கைகளை கழுவதற்கான கிருமிநீக்கி திரவம் இ உணவு பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் என்பன பற்றி தெரிவிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சரினால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்குமாறு அமைச்சின் செயலார் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கமைய அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டமை கவலையளிப்பதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திய அமைச்சர் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினரை அழைத்து நேற்றையதினம் வியாழக்கிழமை விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது 4000 கிருமிநீக்கி திரவ போத்தல்களும் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. பொது சுகாதார பரிசோதகர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபட்டுக் கொண்டிருந்த போது அவர்களால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டமை கவலையளிப்பதாகவும் இதன் போது அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

சிறுத்தையின் இறப்பில் சந்தேகம் :விசாரணைக்கு குழு

முட்டை இறக்குமதிக்கு அனுமதி – நளின் பெர்னாண்டோ.

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor