உள்நாடு

அரசியல்வாதிகள் ஏன் மோசமாக நடந்துகொள்கிறார்கள் – மஹிந்த தேசப்பிரிய

(UTV|கொழும்பு ) – தேசிய அனர்த்த காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளைக்கூட அரசியல் சுய இலாபத்திற்காக மாற்றிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனர்த்தத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய எவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்துகின்றார்.

கொரோனா தொற்றுநோய் பரவல் மக்களை அதிகம் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதன் காரணமாக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே நாம் பொதுத் தேர்தலைக்கூட பிற்போட நேர்ந்தது. அவ்வாறு இருக்கையில் இந்த காலகட்டத்தில் தேர்தல் சட்டத்தை மீறும் விதத்தில் அரசியல் கட்சிகள் செயற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் கூட அரசியல் இலாபம் பெறப்படும் விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் வகையில் இவர்கள் செயற்படுகின்றனர். அரச அதிகாரிகள் மூலமாக பொதுமக்களுக்கு சமுர்த்தி நிதி பங்கிடப்படுகின்ற நேரங்களில் அவர்களுடன் இணைந்து அரசியல் பிரதிநிதிகள் தமது கட்சியையும் சின்னத்தையும் பிரசித்திபடுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த கால எல்லைக்குள் அரசியல் பக்கசார்புகளை கைவிட்டு பொதுவான வேலைத்திட்டம் ஏதேனும் இருப்பின் அதனை கையாள வேண்டும் என நாம் ஏற்கனவே சகல தரப்பையும் அறிவுறுத்தியுள்ளோம்.

எனினும் இவர்கள் மறைமுகமாக இந்த வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இக்கட்டான சூழ்நிலையிலும் அரசியல் செய்ய முயற்சிப்பதன் மூலமாக எமது நாடு எந்த திசையில் பயணிக்கின்றது என்பதை உணர முடிகின்றது. நாம் மதம், இனம் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து நாடாக இயங்கிக்கொண்டுள்ள இந்த நேரத்தில் அரசியல்வாதிகள் ஏன் இவ்வாறு மோசமாகவும் கீழ்த்தரமாகவும் செயற்படுகின்றனர் என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த தேசிய அனர்த்த சூழலில் அதனை அரசியலாக பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்

Related posts

அடுத்தவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவப் பண்பு எமது அரசியல் தலைவர்களிடம் இல்லை – ஐங்கரநேசன் ஆதங்கம்

அமரர் தொண்டமானின் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்

ரயில் தடம்புரள்வு – வடக்கு புகையிரத சேவை பாதிப்பு