உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரஸ் காரணமாக முஸ்லிம் ஒருவர் மரணித்தால் அவரின் இறுதிக் கிரியைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸின் மூலம்  முஸ்லிமான ஒருவர் மரணித்தால், அவரைக் குளிப்பாட்டுவது, கபன் செய்வது, தொழுகை நடாத்துவது மற்றும் அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீது பர்ளு கிபாயாவாகும். பர்ளு கிபாயா என்பது, இவற்றை முஸ்லிம்களில் சிலர் நிறைவேற்றி விட்டால் போதுமானது. அவ்வாறு யாரும், அக்கடமைகளை நிறைவேற்றாவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் பாவிகளாக ஆகிவிடுவார்கள்.

அவ்வாறே, தொழுகை நடாத்துவதற்கு முன் ஜனாஸா குளிப்பாட்டப்பட்டிருப்பது அவசியமாகும். நீரில் மூழ்கி அல்லது இடிபாடுகளுக்குள் சிக்குண்டு ஒருவர் மரணித்து, அவரது ஜனாஸா கிடைக்கப் பெறாத சந்தர்ப்பங்களில், அதைக் குளிப்பாட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகின்றது.  இந்நிலைகளில், தொழுகை நடாத்த முடியுமா எனும் விடயத்தில், மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள், ஒரு ஜனாஸா மீது தொழுகை நடாத்துவதற்கு குளிப்பாட்டல் நிபந்தனையாகும் என்பதால், குளிப்பாட்ட முடியாமலாகுமிடத்து, தொழுகை நடாத்த முடியாது என்று கூறுகின்றனர்.

என்றாலும், சில மார்க்க அறிஞர்கள், ஜனாஸாத் தொழுகையின் நோக்கம், மரணித்தவருக்கு துஆ செய்வதாகும். அவ்வாறே, ஜனாஸாவுடைய நான்கு கடமைகளில் சில கடமைகளை நிறைவேற்ற முடியாது என்பதால், நிறைவேற்ற முடியுமான கடமைகளை விட்டு விட முடியாது என்று கூறுகின்றனர். இதற்கு “ஒரு காரியத்தில் இயலாத சில விடயங்களுக்காக இயலுமான விடயங்களையும் சேர்த்து விட்டுவிட முடியாது” எனும் அடிப்படையை ஆதாரமாகக் கூறுகின்றனர்.

இவ்வடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணித்த ஒருவரது உடலிலிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்பதால், அவ்வாறு மரணிப்பவர்களின் உடல் முற்றுமுழுதாக பையினால் மூடப்படும். எனவே, அதைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், மேற்கூறப்பட்ட இரண்டாவது கருத்தின் அடிப்படையில், கொரோனா வைரஸ் தாக்கி மரணிக்கும் ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது போனாலும், அதற்காக ஜனாஸாத்  தொழுகையை நடாத்தி அடக்கம் செய்வது அவசியமாகும்.

அவற்றில், மரணித்தவரது ஜனாஸாவை குளிப்பாட்ட முடியாது, ஜனாஸாவை எரித்தல் வேண்டும், அடக்குவதாக இருந்தால், ஆறு அடிகள் ஆழமாக கப்ரு இருத்தல் வேண்டும், அரசாங்க அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்யப்படல் வேண்டும், மிகவும் நெருங்கிய ஒரு சில உறவினர்களே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு அனுமதிக்கப்படல் வேண்டும், பிரத்தியேக இடத்தில் அடக்கம் செய்தல் வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் உள்ளன.

மேற்குறிப்பிட்ட மார்க்க சட்டத்தின் அடிப்படையில், மரணித்தவரின் உடலைக் குளிப்பாட்ட அல்லது தயம்மும் செய்ய முடியாது என்பதால் தொழுகை மாத்திரம் நடாத்தி அரச அதிகாரிகளின் அறிவுரைகளுடன், அதிக நபர்கள் ஒன்று சேராமல், முக்கிய சிலர் மாத்திரம் ஒன்று சேர்ந்து ஜனாஸா தொழுகை மற்றும் அடக்கும் பணிகளில் ஈடுபடுதல் வேண்டும். மற்றவர்கள் இவ்வாறான நிர்ப்பந்த நிலையில் மறைமுக ஜனாஸாத் தொழுகையை தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

அல்லாஹு தஆலா இத்தகைய நோயினால் மரணிப்பவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை அருள்வானாக, அத்துடன் அவர்களது குடும்பத்தினருக்கு மன ஆறுதலைக் கொடுத்தருள்வானாக.

Related posts

கட்சித் தலைவர்கள் – சபாநாயகர் இடையே விசேட சந்திப்பு

கலாநிதி பட்டம் குறித்து பாராளுமன்றத்தின் அதிரடி அறிவிப்பு

editor

O/L பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர்