(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு, மக்களின் பளுவைக் குறைக்கும் வகையில், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, 2020 மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் 06 மாதங்களுக்கு அறவிடாது இருக்கும் வகையில், அதனை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை காரணமாக, எமது நட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும், சவால்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, வடக்கில் வாழும் மக்கள் தங்களின் அன்றாட ஜீவனோபாயத் தொழில்களுடன் கூலித் தொழில்களையும், வீதியோரங்களில் சிறு வியாபாரங்களையும் மேற்கொண்டு வந்தனர்.
தற்போது நாட்டில் பரவி வரும் உயிர்கொல்லி தொற்று நோயான கொரோனா (COVID 19) வைரஸினை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக, அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்கல்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, அவர்களது சுமைகளை சிறிதளவேனும் குறைக்கும் நோக்கில், அவர்களது மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, 2020 மார்ச் மாதம் தொடக்கம் ஆறு மாதங்களுக்கு அறவிடாது, இரத்துச் செய்யுமாறு தங்களை மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
எஸ்.எச்.எம்.முஜாஹிர்
தவிசாளர்,
மன்னார் பிரதேச சபை.
-ஊடகப்பிரிவு –