(UTV|கொழும்பு) – இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தற்போது வழங்கப்பட்ட அனைத்து வகையான விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டவர்கள் விசா கட்டணத்தை செலுத்தி, அதனை தமது வெளிநாட்டு கடவுச் சீட்டுகளில் முத்திரையிட்டு நீடித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக ஏப்ரல் மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில், ஏதேனும் ஒரு தினத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விஸா பிரிவுவிற்கு வருகைதர முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காலத்திற்கு முன்னர், நாட்டிலிருந்து வெளியேற திட்டமிடுபவர்கள், விசாவை நீடிப்பதற்கான கட்டணத்தை, விமான நிலையத்தில் செலுத்தி, நாட்டிலிருந்து வெளியேற முடியும் என்றும் இதன்போது, தண்டப் பணம் அறிவிடப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது