உலகம்

பதவி விலகினார் ஈராக் பிரதமர்

(UTV|ஈராக்) – பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகி விட்டதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி பர்ஹாம் சாலிக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கியதால், அரசு இரும்பு கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களால் சுமார் 400 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆனால் மக்களின் போராட்டம் ஓயாமல், நாளுக்குநாள் மேலும் தீவிரமடைய தொடங்கியது. இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதன் பிறகு ஈராக்கின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் முகமது தவுபிக் அலாவியை, கடந்த மாதம் ஜனாதிபதி பர்ஹாம் சாலி நியமித்தார். பிரதமராக பொறுப்பேற்ற உடனேயே, போராட்டக்காரர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிப்பேன் என்றும், ஊழலை எதிர்த்து போராடுவேன் என்றும் முகமது தவுபிக் அலாவி உறுதியளித்தார். ஆனால் அவரை பிரதமராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பான நம்பிக்கை வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றபோது வாக்கெடுப்பில் போதுமான ஆதரவு கிடைக்காததால், முகமது தவுபிக் அலாவி பதவி விலகி விட்டதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதி பர்ஹாம் சாலிக்கு அவர் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

“கட்டாரில் கவர்ச்சி ஆடைகளுக்கு அதிரடி தடை”

மாஸ்க் அணிவதும் அணியாததும் தனிநபர் விருப்பம்

இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் 14 வருட சிறை!