உள்நாடுசூடான செய்திகள் 1

அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு

(UTV|கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று மாலை (11) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுக்களை அவர் முற்றாக மறுத்துள்ளதுடன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், அவர் தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருந்ததாகவும், பாராளுமன்ற தெரிவுக்குழு சாட்சியங்களில் அவற்றுக்கான தெளிவுபடுத்தலை வழங்கி இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

“அமெரிக்காவிலோ வேறு எந்த நாட்டிலோ தனக்கு எந்த வங்கிக்கணக்கும் இல்லையெனவும், 52 நாள் அரசாங்கத்தில் அமெரிக்க வங்கிக்கணக்கு ஒன்றில் தனது பெயரில் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டதாகவும் முழுப்பொய்யைக் வீரவன்ச கூறியுள்ளார். அதேபோன்று, எனது பெயரிலான 200க்கு மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதையும் அவர் நிரூபிக்க வேண்டுமெனவும் விமல் வீரவன்சவுக்கு நான் சவால் விடுக்கின்றேன். அத்துடன், விமல் வீரவன்ச, பொலிஸ்மா அதிபர் போன்றோ சீஐடி போன்றோ செயற்படக் கூடாதெனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த காலங்களிலும் விமல் வீரவன்ச போன்றவர்கள் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டை என்மீது சுமத்தியதோடு, அவற்றை நான் நிராகரித்ததுடன் அவ்வாறு எனக்குச் சொந்தமான காணிகள் இருந்தால், அதனை அரசுடமையாக்குமாறும் பகிரங்கமாக தெரிவுக்குழுவிலும் எடுத்துரைத்தேன். வெறுமனே தேர்தல் வெற்றிக்காக விமல் வீரவன்ச போன்ற ஊழல்வாதிகளும் இனவாதிகளும் காட்போட் வீரர்களாக வலம்வந்து, ஊடகங்கள் முன்னிலையில் வீராப்புப் பேசிக்கொண்டிருக்காமல், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஒப்புவிக்க வேண்டும்.

அத்துடன், சதொச நிறுவனத்துக்கான ஜெனரேட்டர் கொள்வனவில் பாரிய ஊழல் நடந்திருப்பதாக இன்னுமொரு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். இதுவும் அப்பட்டமான பொய்யாகும். சதொச நிறுவனத்துக்கான பொருள் கொள்வனவின்போது ரூபா 250 மில்லியனுக்கு அது மேற்பட்டிருந்தால், அமைச்சின் செயலாளர் தலைமையிலான, கேள்விப்பத்திர சபை ஒன்றே அந்த விடயத்தைக் கையாளும். அதேபோன்று, நூறு மில்லியன் ரூபாவுக்கு குறைவான பொருள் கொள்வனவின்போது, சதொச நிறுவனத் தலைவர் தலைமையிலான கேள்விப்பத்திர சபை ஒன்று அந்த விவகாரத்தைக் கையாளும். இதற்கு மேலாக பொருட்களின் தரத்தை பரிசீலிப்பதற்கும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவொன்று பணியில் அமர்த்தப்படும். எனவே, சதொச நிறுவனப் பொருள் கொள்வனவில் எனது தலையீடு ஒருபோதும் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

எனவே, விமல் வீரவன்சவின் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் முற்றாக மறுப்பதுடன், அரசியலுக்காக பொய்யான பிரசாரங்களை இனிமேலும் கட்டவிழ்த்துவிடுவதை விமல் வீரவன்ச உடன் கைவிட வேண்டுமென கோருகின்றேன்.

அதுமாத்திரமின்றி, வில்பத்துவை அழித்ததாகவும் விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் சுமத்திவரும் குற்றச்சாட்டை நான் ஏற்கனவே பலதடவை மறுத்திருப்பதுடன் மாத்திரமின்றி, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறும் சுமார் 02 மாதங்களுக்கு முன்னதாக கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தேன்” என்று கூறினார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுவதற்கு எந்தவொரு கட்சியும் இல்லை – லால்காந்த

editor

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!