சூடான செய்திகள் 1

பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக முஸ்லிம் லீக் அமைப்பு ரூ. 100 கோடி நிதி

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு வழங்கவென 5 மில்லியன் டொலர் (ரூ. 100 கோடி) நிதியை உலக முஸ்லிம் லீக் அமைப்பு வழங்கியுள்ளது.

மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நேற்று (30) தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட உலக முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளா் நாயகம் கலாநிதி அப்துல் கரீம் அல்லிஸா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாநாட்டின் நிறைவில் வைத்துக் கையளித்தார்.

ஏப்ரல் 21ஆம் திகதிய சம்பவங்களினால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சமாதானம், ஐக்கியம் மற்றும் நல்லிணத்திற்கான தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் சமயங்களுக்கும் இனங்களுக்கும் மத்தியில் சமாதானம், சகவாழ்வு, சகிப்புத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்த்தல், பல்வேறு சமய பிரிவுகளுக்கு மத்தியில் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் வாழும் செய்தியை உலக மக்களுக்கு வழங்குவதும் நாட்டில் அனைத்து சமூக மக்களும் சமாதானமாகவும் நல்லிணக்கமாகவும் வாழ்வதை உறுதிப்படுத்துவதும் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமாகும்.

சமயத் தலைவர்கள், முன்னணி அரசியல்வாதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன், உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளரும் சர்வதேச சங்கத்தின் தலைவருமான கலாநிதி முஹம்மட் பின் அப்துல்லாஹ் கரீம் அலீஷா உள்ளிட்ட அதிதிகளும் கலந்துகொண்டனர்.

Related posts

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று(04)

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு…

‘நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்’ நாசகாரிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அமைச்சர் ரிஷாட்டிடம் வேதனை!