முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக் கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 06 ஆம் திகதி அன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் 108 பானைகளில் பிரம்மாண்ட பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த பொங்கல் நிகழ்வின் போது, ஆலய சூழலை அலங்கரிப்பதற்காக ஆங்காங்கே வீதியின் ஓரமாக வீதியின் மேலாகவும் நந்தி கொடிகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குறித்த நந்திக் கொடிகள் அறுத்து எறியப்பட்டுள்ளன. அத்தோடு அந்த நந்திக் கொடிகளை கட்டியிருந்த கம்பங்கள் பிடுங்கி ஓரிடத்தில் அடுக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆலயம் தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.