கட்டுரைகள்

சிறுபான்மையைத் துண்டாடும் திருகுதாளங்கள்

(UTV|COLOMBO)  முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள்,அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்திருந்த தீர்மானம், பிற சமூகங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் சில விடயங்களில் இது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தில் இருந்த காலத்தில் சாதிக்காததையும் சாதித்துள்ளது. இதனால் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்ந்து நிலைக்க வேண்டுமென சமூகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் புத்திஜீவிகள் வரை உணரப்படுகிறது. எனினும் இந்தச் சமூக ஒன்றிப்பில் தென்னிலங்கை முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் நிலைக்க முடியாததையும் அவதானிக்க முடிகிறது. தேசிய கட்சிகளிலிருந்து தென்னிலங்கையில் தெரிவாகும் இவர்களின் வெற்றியில் சிங்கள வாக்குகள் செல்வாக்குச்செலுத்துவதே இதற்கான காரணமாகும்.

தனித்துவ கட்சிகளே சமூகத்துக்கான குரல் என்பதையும், சமூகமொன்றின் ஒருமித்த தீர்மானம் பேரினவாதத்தைப் பலவீனப்படுத்தும் என்பதையும் இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் பதவி விலகல்களால் சர்வதேச சமூகத்துக்கு எமது தலைமைகள் சொன்ன செய்தியும், கடைப்பிடித்த நிதான போக்குகளும் முஸ்லிம் சமூகத்தை அச்சத்திலிருந்து தப்பிக்க வைத்தது. கடும்போக்குவாதம் ஒரு பக்கமும், மேலாண்மைவாதம் மற்றொரு பக்கமும் முஸ்லிம் சமூகத்தையும் நெருக்குகையில் இருதலைக் கொள்ளிக்குள் மாட்டிய முஸ்லிம் தலைமைகள், நெருப்பில் அகப்பட்டு எரியாமல் குளத்துக்குள் பாய்ந்தது போலவே இவர்களின் பதவி விலகல்கள் பார்க்கப்படுகிறது. இப்போது இந்தக்குளத்திற்குள் முஸ்லிம் சமூகம் மூழ்காமல் கரையேற்றும் பொறுப்புக்களும் இத்தலைமைகளின் தலைகளில் சுமத்தப்பட்டுள்ளன.

மகாநாயக்கர்களின் அழைப்பையேற்று கண்டி மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்ற முஸ்லிம் தலைவர்கள், அமைச்சுக்களை ஏற்குமாறு மகாசங்கத்தினர் விடுத்த அழைப்பை கௌரவமாக ஏற்றுக்கொள்ளத் தயார்தான். ஒரேயொரு விடயமே இத்தலைமைகளை நெருடிக் கொண்டிருக்கிறது. ஈஸ்டர் தினத்தில் ஒரு சிலர் செய்த ஈனச்செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அச்சுறுத்தி அடிபணியச் செய்யப் புறப்பட்ட ஆக்கிரமிப்புப் போக்குகளையும், வஹாபிய முஸ்லிம்களுக்கு எதிரான தமது போரில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதெனக் கூறிக்கொண்டு 22 இலட்சம் முஸ்லிம்களையும் காவு கொள்ளக் களமிறங்கிய கடும்போக்கர்களையும் கட்டுப்படுத்த மகாசங்கத்தினர் முன்வரவில்லை என்பதே அது. முஸ்லிம்களுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களையும், நெருக்குதல்களையும் இல்லாமல் செய்வதற்கு பௌத்த பீடங்கள் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமெனவும் இச்சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் தென்னிலங்கையில் பிரதிபலித்தால் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பாரமெடுப்பதில் தவறில்லைதான். ஆனால் எதிர்வரும் தேர்தலுக்காக, தென்னிலங்கையில் இனவாதமும்,பேரினவாதமும் உயிரூட்டப்படுவதே நிலைமைகளைச் சிக்கலாக்கியுள்ளது. இத்தேர்தல்களில் ஈஸ்டர் தினத் தாக்குதல்களும் அரசியல் முதலீடாக முதலிடப்படவுள்ளன. இதற்காக அத்தனை இனவாத வங்கிகளையும் திறந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன, இதற்கான கணக்குகளிலும் முதலிட்டுள்ளன. இதனை அடிப்படையாக வைத்தே

ராஜபக்‌ஷக்களின் ராஜதந்திரமும் நகர்த்தப்படுகிறது.

2015 இல் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ வெற்றிக்கான கடைசி வியூகமாக இனவாத மந்திரத்தைக் கையிலெடுத்தார். தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்கள தேசத்தின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் எமது (பௌத்தர்கள்) தலைவிதியை மாற்றியமைக்க, சிங்களவர்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டுமென்றார். அதிகாரத்தின் உச்சத்திலிருப்போர், தங்களை நிலைப்படுத்த இவ்வாறான இனவாத மந்திரங்களை இதற்கு முன்னரும் பாவித்து அச்சுறுத்தியதை சிறுபான்மையினர் மறப்பதற்கில்லை. ஆனால் மஹிந்தவின் இந்த இனவாத மந்திரம் 2015 இல் பலிக்கவில்லை. இந்தத் தோல்வியைப் பழிவாங்க தருணம் பார்த்திருந்த ராஜபக்‌ஷக்கள் ஈஸ்டர்தினத் தாக்குதலுக்கு புதிய இனவாத விளம்பரங்களைத் தூக்கிப்பிடித்துள்ளனர்.

பர்தா விவகாரம், பள்ளிவாசல் உடைப்பு, ஹராம், ஹலால் பிரச்சினை விடயத்தில் எண்பது வீதமான சிங்களவர்களின் மனநிலைகளைப் புரிந்தபின்னரே தீர்த்து வைக்க முடியும். சற்றுப் பொறுமையாக இருக்குமாறு கோரினேன். ஆனால் முஸ்லிம் தலைவர்களை இயக்கிய அடிப்படைவாதம் என்னிலிருந்து அவர்களைப் பிரித்துவிட்டதாலே சிங்கள தேசம் தோற்கடிக்கப்பட்ட தென்கிறார். ராஜபக்‌ஷவின் இந்த ராஜதந்திரத்தில் பொதிந்துள்ள இரண்டு விடயங்கள் மிக ஆபத்தானவை என்பதை நமது சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தனது தோல்வியை சிங்கள தேசத்தின் தோல்வி என்கிறார். முஸ்லிம் தலைமைகளை அடிப்படை வாதம் இயக்குவதாகக் கூறி, கடும்போக்கு வாக்குகளைக் குறிவைப்பதே இவர்களின் இராஜதந்திரம். இழந்துபோன முஸ்லிம் வாக்குகளை மீளப்பெற வழியில்லாத மொட்டு அணியினர் கடும்போக்கர்களை உசுப்பேற்ற பலரைக் களமிறக்கியுள்ளனர். இவற்றில் எம் பி தேரரும், மட்டுத் தமிழ் எம்பியுமே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிப்பதற்கு தமிழர்களை ஒன்றுபடுமாறு யாழ்ப்பாணத்தில் அழைப்புவிடுக்கும் இந்த எம்பித், தேரர் கொழும்பில் தமிழர்களின் சமஷ்டி அதிகாரங்களுக்கு எதிராகப் பேசுகின்றார்.

இவரின் இந்த அறைகூவல் முப்பது வருடப் போருக்கான பெறுமானங்கள் தமிழர்களின் கையில் கிடைப்பதைத்தடுக்கும் பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரம் என்பதை சிரேஷ்ட தமிழ் தலைவர்கள் அறியாமலா இருப்பர். கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை முஸ்லிம்களிடம் ஒப்படைத்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தக்க பாடம் புகட்டுவதற்கு மஹிந்தவின் ராஜதந்திரத்தை கையிலெடுத்துள்ள மட்டுத் தமிழ் எம்பி, போருக்குப் பின்னரான சூழ்நிலையைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இலங்கைத் தமிழர்கள் மீதான இந்திய அரசின் அணுகுமுறை, அக்கறைகள் பௌத்த மேலாண்மைவாதத்தின் அடிவயிற்றில் அம்பை எய்தது போலுள்ளது.

மோடியின் தனிப் பெரும்பான்மை வெற்றி, தமிழ் தலைமைகளுக் கான அழைப்பு என்பவற்றை நன்கு அவதானித்த, ராஜபக்‌ஷக்களின் பௌத்தப்பற்றும் கடந்தகால வெற்றிப் பெருமையும் அரசியல் தீர்வுகளுக்கான சூழலைத் திசைதிருப்பத் துணிந்துள்ளன. இதற்காகவே காலம் கனிந்து வருகையில் தமிழ் எம்பியையும், பௌத்த எம்பியையும் வெவ்வேறு திசைகளுக்கு ஏவிவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தாக்குதலுக்குப் பின்னர் தனித்துவிடப்பட்ட முஸ்லிம்கள் தற்காப்புக்காக தமிழர்களை அழைக்கும் சந்தர்ப்பவாத அழைப்பாக மட்டும் தமிழ்ச்சகோதரர்கள் இந்தக் கட்டுரையைக் கருதக்கூடாதென்பதே எனது வேண்டுகோள்.

சுஐப் எம். காசிம்

 

Related posts

இந்திய இராணுவம் கற்பழிப்பை பழிவாங்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது

அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசின் கட்டாய அறிவிப்பு !