(UTV|COLOMBO) நேற்று முன்தினம் (02) அறிவு சார்ந்தோர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் சகோதரத்துவத்துக்கான அறிவு சார் ஒன்று கூடல் நிகழ்வு கண்டி கெட்டம்பையிலுள்ள ஒக்ரோ ஹோட்டலில் இடம்பெற்றது.
இதன்படி இந்நிகழ்வில் குழுக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்:
இந்நாட்டில் ஊடகம் குருதியை ஓடச்செய்கின்ற சாதனமாக அமைந்துள்ளது. இந்த ஊடக நெறிமுறை இல்லாமற் செய்யப்பட வேண்டும். இதுவரைக்கும் 2000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் படையினரால் சோதனை செய்யப்பட்டுள்ளது. சகல பள்ளிவாசல்களிலும் வாள்கள் இருப்பதாக ஊடகங்கள் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றன.
குறிப்பாகச் மஸ்கெலியாவிலுள்ள ஒரே ஒரு பள்ளிவாசலில் மட்டும் தான் வாள் தொடர்பான செய்தி உண்மை தன்மையுடன் பதிவாகியுள்ளது.
அதற்காக வேண்டிய சட்ட நடடிக்கைகள் எடுங்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் மக்களுக்கு சரியான வழி முறைகளைக் காட்ட வேண்டும் இதை ஒரு நாடகமாய் காட்ட வேண்டாம். என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
—————
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இராணுவப் படை அணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நிசங்க ரணவன உரையாற்றுகையில் இது ஒரு அழகிய நாடு,எல்லோருக்குமான நாடு. எமது பிரச்சினையை அறிவு பூர்வமாகச் சிந்தித்து மிகுந்த நிதானத்துடன் கட்டி எழுப்புவோம் என்று தெரிவித்தார்.
————
பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திசாநாயக உரையாற்றுகையில் இந்த நாட்டுக்கு முஸ்லிம் பாடசாலை அவசியமில்லை. தமிழ் பாடசாலை அவசியமில்லை, சிங்களப் பாடசாலை அவசியமில்லை. இந்நாட்டுக்கு பொதுவான பாடசாலை அவசியமாகும்.
அந்த வகையில் பொதுவான கலாசாரம் உருவாகி புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
அந்த இடத்துக்குச் செல்ல எல்லோரும் முயற்சி செய்வோம். குறுகிய காலத்தில் தீவிர வாதத்திற்கு இராணுவத்தின் மூலம் தீர்வு எட்ட முடியுமாயின் நாம் நீண்ட கால திட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை ஏன் எட்ட முடியாது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிகழ்வில் கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே திலங்க பண்டார,முன்னாள் குருநாகல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பங்குத் தந்தை அருட் திரு குமார இலங்கசிங்க, பௌத்த சமயத் தலைவர்கள். விசேட வளவாளராக இராணுவ படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி சேனக முத்துக்குமார , ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், பேராசிரியர் எம். எஸ் எம். அனஸ், பேராசிரியர் மு டியூடர் சில்வா, அஷ்ஷெய்க் அம்ஹர் ஹக்கீடீன் உள்ளிட்ட பல முக்கிய அறிவு சார் பெருந்தகைளுடன் சிங்கள,தமிழ் சிவில் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர்.