கேளிக்கை

மக்களை சிரிக்க வைத்த நடிகர் தவக்கலைக்கு சினிமாவே எமனான கதை

(UDHAYAM, KOLLYWOOD) – அண்மையில் காலமான நடிகர் தவக்களை பற்றிய செய்திகள் ஒரு சிறிய செய்தியாக கடந்து போய்விட்டது.

ஆனால் மக்களை சிரிக்க வைத்த அந்த கலைஞனை சினிமா சிரிக்க வைக்காமல் போய்விட்டது என்பதே உண்மை.

அவரைப் பற்றி ஒரு சிறிய பார்வை…

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நவாப்பேட்டைதான் சொந்த ஊர். 1975ம் ஆண்டு பிறந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு.

3 அடி உயரம்தான் வளர்ந்தார். 3ம் வகுப்புவரைதான் படித்தார். அவர் நடிகர் என்பதை விட அடிப்படையில் அவர் ஒரு நடன கலைஞர் என்பது பலருக்கும் தெரியாது.

நடிகை அனுராதாவின் தந்தைதான் அவரது குரு. தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு பல தெலுங்கு படங்களில் குரூப் டான்சராக பணியாற்றி இருக்கிறார்.

இரண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்தார். பலரும் அவருக்கு முந்தானை முடிச்சுதான் முதல் படம் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்பே அவர் பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடித்துவிட்டார்.

தவக்களையின் நண்பர் குள்ளமணி. இருவரும் ஒரு முறை கே.பாக்யராஜை சந்திக்க சென்றார்கள். அப்போது தவக்களையின் குழந்தை தனமான குரலும், மாடுலேசனும் பிடித்து விட அவரை மனதில் வைத்து முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகப்படுத்தினார்.

ஹீரோயின் ஊர்வசியின் நண்பனாக நடித்தார். கேரக்டர் பெயர் தவக்களை. அந்தப் படம் பெரிய வெற்றி பெற்று இவர் நடித்த கேரக்டரும் பேசப்பட்டதால் பெயரும் தவக்களை என்றே நிலைத்தது.

இந்தியில் அமிதாப்பச்சன், தென்னிந்தியாவில் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து விட்டார். இந்திய மொழிகள் அனைத்திலும் சேர்த்து 400 படங்கள் நடித்தார்.

வினயன் இயக்கிற அற்புத தீவுதான் தமிழில் கடைசியாக நடித்த படம். சினிமா வாய்ப்பு குறைந்தாலும் நடனப்பள்ளி நடத்தி சம்பாதித்தார்.

சினி மின்மினி என்ற நடன குழுவை நடத்தி வந்தார். கோவில் திருவிழாக்கள், அரசு பொருட்காட்சிகளில் நடன நிகழ்ச்சி நடத்தி பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார். தனது நடன பள்ளி மூலம் பல நடன கலைஞர்களை உருவாக்கினார்.

அனைத்திலும் வெற்றி பெற்ற தவக்களை சொந்தப் பட தயாரிப்பில் தோற்றுப்போனார். தனது சேமிப்பு முழுவதையும் போட்டு மண்ணில் இந்த காதல் என்ற படத்தை தயாரித்தார்.

பொருளாதார நெருக்கடியால் படம் பாதியில் நின்றது. கடன் வாங்கி படத்தை முடிக்க நிறைய கடன் வாங்கினார். ஆனாலும் படத்தை முடிக்க முடியவில்லை.

கடனை அடைக்க முடியவில்லை என்பது அவருக்கு பெரும் மனக்கவலை அளித்தது. அந்த கவலையுடனேயே மீண்டும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி நடிக்க ஆரம்பித்தார்.

அதுவும் காலனுக்கு பொறுக்கவில்லை அவரது உயிரை கவர்ந்து சென்று விட்டான். மக்களை சிரிக்க வைத்த அந்த கலைஞனை சினிமா சிரிக்க வைக்கவில்லை.

Related posts

மீண்டும் ரிலீசாகும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்?

பிரதமர் நரேந்திரமோடியை ‘திருடன்’ என்று விமர்சித்த பிரபல நடிகை

ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் டும் டும்……