சூடான செய்திகள் 1

கிராமம், நகரம் என்ற பேதமின்றி வளங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் ;வவுனியா தரணிக்குளத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

(UTV|COLOMBO) கிராமம் , நகரம் என்ற பாகுபாடின்றி பாடசாலைகளுக்கு தேவையான சகல வளங்களும் சமமாக பங்கிடப்பட வேண்டுமென தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் முன்னேறி வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) கலந்து கொண்டார்.

பாடசாலையின் அதிபர் ஆர் லிங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன், பிரதேச செயலாளர் உதயராசா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மது, மொஹிதீன், வவுனியா நகரசபை உறுப்பினர்களான பாரி, லரீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது; வடக்கில் உள்ள மக்கள் நீண்டகாலமாக எண்ணற்ற துன்பங்களையும் துயரங்களையும் சுமந்து வாழ்ந்தவர்கள். இவற்றை எல்லாம் தாண்டி வாழ்ந்துவரும் இவர்களுக்கு அன்றாட வாழ்விலே பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன .வடக்கிலுள்ள மாணவர்கள் வறுமையின் பிடிக்குள் சிக்கித்தவித்த போதும் கல்வியை கருத்துடன் கற்று வருகின்றனர் .

பின் தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ,ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வளப்பகிர்வுகளில் குறைபாடுகள் இருக்கின்ற போதும் அந்த மாணவர்கள் பரீட்சை பெறு பேறுகளில் முன்நிலை வகிப்பதும் தேசிய ரீதியில் சாதனை படைப்பதும் மகிழ்ச்சிக்குரியது. நகரப்பாடசாலைகளுக்கு கிடைக்கும் வளங்களை போன்று கிராமப்புற பாடசாலைகளுக்கும் தூர இடங்களிலும் பின்தங்கிய இடங்களிலும் அமைந்துள்ள பாடசாலைகளுக்கும் வளங்கள் சமமாக பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உடைய நான், எனது அரசியல் வாழ்விலும் அதனை செயற்படுத்தி வருகின்றேன்.

வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள பாடசாலைகள் வைத்திய , பொறியியல் மற்றும் வர்த்தக துறைகளில் அண்மைக்காலமாக பெருமளவில் கால்பதித்துவருகின்றன.

நகரப்பாடசாலைகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்த பிரதேச மாணவர்களின் கல்வித்தரம் வளர்ச்சி பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் கல்விக்காக இந்த பிரதேசத்தில் பெருமளவு நிதியை செலவு செய்துள்ளோம். மத்திய அரசு ,மாகாண அரசுகளின் மூலம் இந்த நிதி செலவிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளின் கடன்களை பெற்று கல்விக்காக மூலதனமிட்டுள்ளோம். இவ்வாறான வளங்களை சரியாக பயன்படுத்தி மாணவர்கள் ஒழுக்கத்துடன் இணைந்த கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவனும் இலக்கில்லாமல் தமது கல்வியை தொடர்ந்தால் சிறப்பான அடைவை ஈட்ட முடியாது.

வன்னி பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. அதே போன்று இந்த பாடசாலையிலும் பல்வேறு தேவைகள் உள்ளதாக பாடசாலை நிருவாகம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் உடனடியாக இந்த பாடசாலையின் முகப்புக்க்காக ரூபா 15 இலட்சத்தை ஒதுக்கீடு செய்வதற்கு முடிவு செய்துள்ளேன் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை

ஒஸ்டின் பெர்ணான்டோ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

பாடசாலைகளில் பாதுகாப்பு குழு நியமனம்…