சூடான செய்திகள் 1

சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை

(UTV|COLOMBO) இளமையின் எதிர்கால நுழைவாயிலை திறக்கும் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் ஆரம்பம்…

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (08) பொலன்னறுவையில் தொழில்வழிகாட்டல் தேசிய மத்திய நிலையத்தின் முதலாவது மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இலங்கையில் வேலைவாய்ப்பில்லாத பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கி, அனைத்து தொழிற்பயிற்சி தொழில் வழங்கல் மத்திய நிலையங்களையும் ஒன்று திரட்டி, உயர் தொழிநுட்ப முறைமைகளின் மூலம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதையும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதையும் நோக்கமாகக்கொண்டு இலங்கை தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் ஜனாதிபதி அலுவலகத்தின் “ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இளைஞர், யுவதிகள் தாம் தெரிவுசெய்த தொழிற்துறையில் வெற்றிகரமாக பயணிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பங்கள், தொழில் வங்கிகள் உள்ளிட்ட வலையமைப்பு தொழிற்தகவல் சேவையொன்றை வழங்குதல், தனிப்பட்ட முறையில் தொழில் வழிகாட்டல் நிபுணர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு, தொழில் வழிகாட்டல் சேவையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துதல், நாடளாவிய ரீதியில் உள்ள தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பொன்றை கட்டியெழுப்புதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையை முதன்மையாகக் கொண்ட பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பேண்தகு வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கி இளைஞர்களை வழிப்படுத்துதல், இளந்தலைமுறையினர் மத்தியில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை குறைத்தல், இயற்கை வளங்களை உரிய முகாமைத்துவத்துடன் பயன்படுத்தக்கூடிய புதிய கைத்தொழில் மற்றும் முதலீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் போன்ற பூகோள இலக்குகள் இதன் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

தமது தகைமைகளுக்கு ஏற்ற தொழிலொன்றை பெற்றுக்கொள்வது எங்கே என்ற பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்கு இளைஞர், யுவதிகளுக்கு எதிர்காலத்தில் உள்ள பிரதான நிறுவனமாக இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் மாறும் என்பதுடன், தொழில் கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதிலுள்ள முக்கிய சவால்களில் ஒன்று உளப்பாங்கு ரீதியான மாற்றத்திற்கும் இடர்நிலைமைகளை பொறுப்பேற்கும் இளைஞர் தலைமுறை தயாராக இல்லாதிருப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த சவாலை வெற்றிகொள்வதற்கு இந்த புதிய திட்டம் சிறந்த உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார். எதிர்வரும் 03 மாதங்களில் இந்த தொழில் வழிகாட்டல் நிறுவனம் அனைத்து மாவட்டங்களிலும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து தொழில் வழிகாட்டல் நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, ரவீந்ர சமரவீர, இசுர தேவப்பிரிய, சாந்த பண்டார, எரிக் வீரவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் பெருமளவான இளைஞர், யுவதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு

“நீரின்றி அமையாது உலகு” இந்திய சுதந்திர தின உரையில் திருக்குறளை தமிழில் பேசி மோடி(video)

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்களை கைது செய்ய நடவடிக்கை