சூடான செய்திகள் 1

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO) 30 வருட யுத்தம் முடிந்து நாட்டில் அமைதி மீண்டும் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், மற்றொரு  சிறுபான்மையினரை சீண்டி அவர்களை தேவை இல்லாமல் வம்பிற்கு இழுக்கும் செயற்பாடுகளுக்கு நாம் பலியாகி விடக்கூடாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாத்தாண்டிய, தும்மோதர முஸ்லிம்  வித்தியாலயத்தில் இடம்பெற்ற வருடாந்த  இல்ல விளையாட்டு போட்டியில்  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்  கூறியதாவது,

நாம் எந்த விதமான சச்சரவுக்கும் செல்லாமல் இருந்த போதும் எங்களை வேண்டுமென்றே பிரச்சினைக்காரர்களாக காட்டுகின்ற ஒரு செயற்பாடு  அல்லது  ஒரு சிலரால் மேற்கொள்ளப்படுகின்ற  சில தவறுகளை முழுச் சமுதாயத்தினதும் தவறுகளாகச் சித்தரிக்கும் செயற்பாடு தற்போது மிகவும் திட்டமிட்டு, நாசூக்காக  முன்னெடுக்கப்படுகின்றன. நமது சமூகத்தவர்களை பிழையானவர்களாக காட்டுவதில் சில ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. இதன் மூலம் நமது இளைஞர்களை ஆத்திர மூட்டச்செய்வதே  அவர்களின் இலக்காக இருக்கின்றது. இந்த தருணத்திலே நாம் நிதானமாக சிந்திக்க வேண்டிய நிலையிலும் தூரநோக்குடன் செயல்பட வேண்டிய  கட்டத்திலும்  இருக்கின்றோம்.

இந்த  நிலையில் அகில இலங்கை ஜம்யத்துல் உலமா, சமூகம் சார்ந்த சிவில் அமைப்புகள், முஸ்லிம் சமூக அரசியல் கட்சிகள் தமது கருத்து வேறுபாடுகளை களைந்து எதிர் நிலைச்செயற்பாடுகளை எவ்வாறு எதிர்

நோக்குவது? மற்றும் சமூகத்தை எந்த வகையில் வழிநடாத்துவது? என்பது தொடர்பில் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றது.

ஜனாதிபதியோ, பிரதமரோ நமக்கு  ஏற்பட்டுள்ள, ஏற்படப்போகின்ற ஆபத்துகளைத் தீர்ப்பதற்காக வலிந்து தமது நேரத்தை ஒதுக்கி விமோசனம் பெற்றுத் தருவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அவ்வாறு நாம் எண்ணவுமில்லை. அவர்களுக்கு நாம் வழங்குகின்ற அழுத்தங்கள் மூலமே எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். அதனை நாங்கள் இயன்றளவு சரியாக செய்தும் வருகின்றோம்.

பாடசாலையின் அதிபர் சாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, சிலாபம் நகர சபை உறுப்பினர் சட்டத்தரணி சாதிகுல் அமீன், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பெர்ணாண்டோபுள்ளே மற்றும் டாக்டர் இல்யாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசை கவிழ்ந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் – அசாத் சாலி

மூன்று துப்பாக்கிகளுடன் மூவர் கைது

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு