(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை கண்டறிந்து அதனை மீள்கட்டமைப்பதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்று உரிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி நியமித்த விசேட குழுவின் அறிக்கை நேற்று(28) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவை தலைவராகக் கொண்ட இந்தக் குழுவை, கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி நியமித்திருந்தார்.
நிறுவனத்தைக் கலைத்து மீண்டும் நிறுவுதல், முகாமைத்துவ உடன்படிக்கை, கடன் மறுசீரமைப்பு மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய 3 பிரிவுகள் தொடர்பிலும் இந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடன் முகாமைத்துவம் மற்றும் மூலதன உருவாக்கம் ஆகிய பிரிவுகள் தொடர்பில் கவனம் செலுத்தி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என இரான் விக்ரமரத்ன இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த காலத்திற்குள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி அதன் உறுப்பினர்களுக்கு தமது நன்றியை தெரிவித்தார்.