விளையாட்டு

கோலியின் அதிரடியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

(UTV|AUSTRALIA)-அஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் அபாரமான சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிககளுக்கிடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பின்ச் 6 ஓட்டங்களுடனும்  அலெக்ஸ் கேரி 18 ஓட்டங்களுடனும் கவாஜா 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்டாய்னிஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஷோன் மார்ஷ் அபாரமாக துடுப்பெடுத்தாடி  சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைப்பு அளித்தார். மேக்ஸ்வெல் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷோன் மார்ஷ் 131 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில், அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, 299 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் ஆரம்ப ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 47 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 32 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து இறங்கிய விராட் கோலி ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்ற நிலையில் 43 ஓட்டங்களுடன் ரோகித் வெளியேறினார்.

அதன்பின் இறங்கிய அம்பதி ராயுடு 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போது, இந்தியா 3 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அடுத்து இறங்கிய எம்.எஸ்.டோனி கோலிக்கு ஒத்துழைப்பு அளித்தார். அணித் தலைவர் விராட் கோலி பொறுப்புடன் ஆடி ஒருநாள் போட்டிகளில் 39 ஆவது சதமடித்தார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் டோனியும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டோனி அரை சதமடித்தார்.

இறுதியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளைக்கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என சமனில் உள்ளது.

 

 

 

 

 

Related posts

இலங்கை குழாம் இன்று பாகிஸ்தான் பயணம்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

பதவி விலகத் தயார் – லசித்