சூடான செய்திகள் 1

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

உடன்படிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெறும் வரையிலும், உடன்படிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவுபெறும் வரையிலும் உடன்படிக்கை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொட்டிக்கார தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பிலான நிபுணர் குழு அறிக்கை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை அடுத்த வாரத்துக்குள் அமைச்சிடம் கையளிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் டபிள்யூ.டீ. லக்ஸ்மன் உள்ளிட்ட நிபுணர் குழுவினரால் தொகுக்கப்பட்ட அறிக்கையுடன் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் அறிக்கை தமக்கு கிடைத்ததன் பின்னர் விரிவாக ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவிருந்தது.

குறித்த உடன்படிக்கையினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கு எதிராக பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வைத்தியசாலை கொள்ளையை முறியடித்த பொலிஸ் அதிகாரி பலி

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டி

அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில்-அமைச்சர் மங்கள